நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள தி கோட் படம், இதுவரை 9 நாட்களில் ரூ. 350 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சாட்டிலைட் உரிமம் 90 கோடி ரூபாய், ஓடிடி உரிமம் 120 கோடி ரூபாய், ஆடியோ உரிமம் 20 கோடி ரூபாய் என இதுவரை 580 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம், தயாரிப்பு நிறுவனத்துக்கு வருமானம் தந்துள்ளது.
தி கோட் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 386 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரித்தது. இதில் விஜய் சம்பளம் மட்டுமே ரூ. 200 கோடி தரப்பட்டுள்ளது. அதனால் தி கோட் படத்தை பொருத்த வரை, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டம் இல்லை. 100 கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்தாலும் அது பலத்த லாபம்தான் என்று தெரிய வருகிறது.
நடிகர் விஜய் தி கோட் படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போதே, கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கப் போவதாகவும் அப்போதே அறிவித்தார். இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். மேலும், அதே நாளில் கட்சி பாடலையும் வெளியிட்டார், தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற பாடல், விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வருகிற 23ம் தேதி விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் அரசியல் முதல் மாநாடு நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். நடிகர் மோகன்லால், நடிகைகள் சிம்ரன், மமிதா பைஜூ முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். பூஜா ஹெக்டே தான் நாயகி என்றும் தெரிய வந்துள்ளது.
இப்போது விஜய் 69 படத்தின் பெயர் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்த படத்தை விஜயின் அப்பா, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் டைரக்ட் செய்திருந்தார். இப்போது தனது கடைசி படத்துக்கு நாளைய தீர்ப்பு என்றே பெயர் வைக்க முடிவாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. அரசியலில், விஜயின் நாளைய தீர்ப்பு வெற்றி தான் என்பதை குறிக்கும் விதமாக இந்த டைட்டில்தான் வைக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.





