இயக்குநர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ், தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படுபவர். இந்திய அளவில் கே பாக்யராஜ் போன்ற ஒரு திரைக்கதை ஆசிரியர் இதுவரை இல்லை. இனிமேலும் வரப்போவது இல்லை என்ற பாராட்டுகளுக்கு சொந்தக்காரர். இப்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக கே. பாக்யராஜ் இருந்து வருகிறார்.
இயக்குநர் சிகரம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர் கே. பாக்யராஜ். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் சில காட்சிகளில் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் கே பாக்யராஜ் இயக்குநராகி சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தை டைரக்ட் செய்தார். அதன்பின் இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, சின்ன வீடு என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
நடிகர் கவுண்டமணி, நடிகர் செந்தில் என்ற இரண்டு இணையற்ற நகைச்சுவை நடிகர்களை தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் கே. பாக்யராஜ்தான். அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள்தான் ஆர்பி விஸ்வம், பாண்டியராஜன், பார்த்திபன் போன்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் குருவின் பேர் சொல்லும் நடிகர்களாக, இயக்குநர்களாக இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் தனது படங்களில் நடிக்க வாய்ப்பு தந்து பல பேருக்கு வாழ்க்கை தந்தவர் நடிகர் பாக்யராஜ். கள்ளாப்பட்டி சிங்காரம், ஜனகராஜ், கவுண்டமணி செந்தில், காஜா செரீப், மண்ணாங்கட்டி சுப்ரமணியம், குமரிமுத்து இப்படி பலபேரை சொல்ல முடியும். இன்னும் இயக்குநராக, நடிகராக இருக்கும் பாக்யராஜ், அவ்வப்போது தனக்கு தகுந்த கேரக்டர்கள் அமையும் பட்சத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாக்யராஜ் மகன் சாந்தனு, தமிழ் சினிமாவில் நடிக்க வந்தும் பெரிய அளவில் பெயர் வாங்க முடியவில்லை. பல படங்களில் நடித்தும் அவருக்கு முக்கியமான ஹீரோ அந்தஸ்து ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. இப்போது சாந்தனு நடிப்பில் வெளியாகி இருக்கும் ப்ளூ ஸ்டார் என்ற படம், சாந்தனுவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாந்தனு, சக்கரக்கட்டி படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது. என்னைவிட என் பெற்றோர்தான் என் வெற்றிக்காக ஏங்கிக்கொண்டு இருந்தனர். நிறைய பேரை அறிமுகப்படுத்தி, எல்லோருக்கும் வெற்றியை தேடித்தந்தேன். என் மகனுக்கு வெற்றியை தர முடியவில்லையே என, என் தந்தை வருத்தப்பட்டு அழுதிருக்கிறார். அதுபற்றி என் அம்மா என்னிடம் கூறியிருக்கிறார். அந்த கண்ணீரை துடைக்கும் விதமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது, என்று சாந்தனு கூறியிருக்கிறார்.





