நடிகர் சந்தானம் நடித்த படங்களில் ஒரு கல் ஒரு கண்ணாடி சுருக்கமாக ஓகே ஓகே என அழைக்கப்படும் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. உதயநிதி நாயகனாகவும் சந்தானம் அவரது நண்பராகவும் இணைந்து நடித்த இந்த படத்தை எம் ராஜேஷ் டைரக்ட் செய்திருந்தார். நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருந்தார்.
இந்த படத்தில் பார்த்தா கேரக்டரில் சந்தானம் காமெடியில் அசத்தி இருந்தார். ஒரு காட்சியில் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளும் உதயநிதி சந்தானம் விடியும் வரை ஸ்டேஷனில் இருப்பார்கள். அப்போது சந்தானம் மிமிக்ரி செய்வார் என உதயநிதி மாட்டி விட விடிய விடிய சந்தானம் மிமிக்ரி பேசுவது போன்று அந்த காமெடி காட்சி இருக்கும். ரசிகர்களை வெகுவாக காட்சிகளில் இதுவும் ஒன்று.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, விஜய் டிவியில் நான் வேலை பார்த்த போது நானும் என் நண்பன் ஆண்டனியும் நைட் ஷூட் முடிச்சிட்டு மணப்பாக்கம் வழியாக பைக்குல வந்துட்டு இருந்தோம். அப்போ போலீஸ் எங்களை மடக்கிப் பிடிச்சிட்டாங்க.
யார் நீங்க, இந்நேரத்துல வர்றீங்கன்னு விசாரிச்சாங்க. அப்புறம் விஜய் டிவியில் இந்த மாதிரி லொள்ளு சபாங்கற ஷோ பண்றோம். நடிகர்கள் மாதிரியே நான் பேசி நடிப்பேன்னு சொன்னேன். அப்போ நான் பிகினிங் ஸ்டேஜ்ல இருந்தேன். சின்ன சின்ன ரோல் பண்ணிட்டு இருந்தேன். அப்படியா மிமிக்ரியா, எங்கே பேசி காமின்னு அந்த போலீஸ்காரர் கேட்க நானும் மிமிக்ரி பேசி காட்டினேன்.
அவருக்கு ரொம்பவும் பிடிச்சுப் போய் பேட்ரால் போலீஸ் எல்லாம் கூப்பிட்டு விட்டுட்டார். தம்பி அவர் மாதிரி பேசு, இவர் மாதிரி பேசுன்னு நைட் 2 மணி வரைக்கும் மிமிக்ரி பண்ணிட்டேன். அய்யோ தெரியாமல் சொல்லி இப்படி மாட்டிட்டோம்ன்னு எனக்கு ஆகிடுச்சு.
விடிய விடிய மிமிக்ரி பண்ணி எனக்கு தொண்டை எல்லாம் வறண்டு போச்சு. அந்த சம்பவத்தை நான் டைரக்டர் ராஜேஷ் கிட்ட சொன்னேன். அதுதான் ஓகே ஓகே படத்துல நானும் உதயநிதியும் அந்த போலீஸ்கிட்ட மாட்டிக்கிற சீன் மாதிரி வந்தது என்று நடிகர் சந்தானம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





