வெற்றிமாறனுக்கு கடைசியாக வெளிவந்த விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் கலவையான விமர்சனத்தை கொடுத்தது. அது மட்டுமல்லாமல் அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே சுமாரான வெற்றியை பெற்ற திரைப்படம் அதுதான் என்று கூறலாம். படத்தில் பிரச்சார நெடி அதிகமாக இருந்ததும், தொய்வான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததும் தான் இதற்கு காரணம் என்று பலரும் கூறினார்கள்.
இப்படியான சூழலில் அடுத்ததாக வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தையே இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்கான பணிகள் இன்னும் இருக்கிறது என்பதால் அவர், உடனடியாக சிம்பு திரைப்படத்தை இயக்க முன் வந்தார். கலைப்புலி எஸ் தாணு இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
தக் லைப் திரைப்படத்திற்கு பிறகு, வெற்றிமாறனுடன் சிம்பு கைகோர்த்து இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வடசென்னை திரைப்படத்தின் கிளை கதையாக இது எடுக்கப்படுகிறது. இது குறித்து ஏற்கனவே வீடியோ வெளியிட்டிருந்த வெற்றிமாறன், இது வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்றும் அதே சமயம் அந்த உலகில் தான் இந்த திரைப்படம் இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
அதுமட்டுமல்ல வடசென்னை திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் இதில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேசமயம் தனுஷின் அன்பு கதாபாத்திரம் இதில் வராது என்றும் கூறியிருந்தார் வெற்றிமாறன். இதன் ப்ரோமோ சூட்டிங் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் இயக்குனர் நெல்சன் இருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் அந்த வீடியோவை கூட இன்னும் வெளியிடவில்லை.
அது மட்டுமல்லாமல் படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக செட் போட்டு படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க சூட்டிங் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது சிம்பு ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. குறைந்தபட்சம், ப்ரோமோ வீடியோவையாவது விடுங்கள் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் வெற்றிமாறன், சிம்புவுடன் ஆன திரைப்படம் ஐந்து எபிசோடுகளாக எடுக்கப்பட இருப்பதாக சொல்லி இருக்கிறார். இரண்டு பாகங்களாக இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே தான் கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் அவர் மனம் திறந்து உள்ளார். எப்படி இது வளரப்போகிறது என்பது தனக்கு தெரியவில்லை என்றும் வெற்றிமாறன் கேஷுவலாக பேசி இருக்கிறார்.





