கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி டாக்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குநர் என்று பெயரை எடுத்தவர் நெல்சன் திலீப்குமார். முதல் இரண்டு படங்களையுமே டார்க் காமெடி ஜானரில் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார். குறிப்பாக டாக்டர் படம் முழுக்க முழுக்க டார்க் காமெடியால் நிறைந்திருக்கும். இதன் காரணமாக அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்து ஆச்சரியத்தி ஆழ்த்தியது.
அந்தப் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் பீஸ்ட் தோல்வியையே சந்தித்தது. பீஸ்ட் தோல்வியை விஜய் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதன் காரணமாக நெல்சன் திலீப்குமாரை கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர். சில இடங்களில் நெல்சன் திலீப்குமார் அசிங்கப்படுத்தப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
தற்போது அவரது இயக்கத்தில் ஜெயிலர் படம் ரிலீஸாகியிருக்கிறது. இந்தப் படத்தை ரஜினியும், நெல்சனும் ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே படமானது மெகா ஹிட்டாகி இதுவரை உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்தது. மேலும் இதன் மூலம் ரஜினியும், நெல்சனும் தரமான கம்பேக் கொடுத்துவிட்டதாக கூறினர்.
இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு பேட்டியில் பேசிய நெல்சனிடம் பீஸ்ட் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் நினைத்த நேரத்தில் பீஸ்ட் படத்தை முடிக்க முடியவில்லை. இன்னும் சில காட்சிகள் அதில் எடுக்க வேண்டியிருக்கிறது என்றார்.மேலும் பேசிய அவர் பீஸ்ட் படத்தின் தோல்வி குறித்து விஜய்யிடம் பேசியபோது யோவ் உனக்கும் எனக்கு ஒரு படம்தான் பழக்கமா. அது வேற பழக்கம் வேற என சொல்லிவிட்டு சென்றார்.
சமீபத்தில்கூட விடிவி கணேஷை பார்க்கும்போது அவர் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார். அதாவது, பீஸ்ட் நெகட்டிவ் விமர்சனம் அதிகம் வந்தபோது அவரிடம் விஜய், நீங்க வேணா பாருங்க அடுத்த படமான ஜெயிலரில் அவன் கண்டிப்பா ஹிட் அடிச்சிடுவான் என சொல்லியிருக்கிறார். இப்படி விஜய் நம்மை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார் என சொல்லியிருந்தார் நெல்சன்.
இந்நிலையில் பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களில் கலை இயக்குநர் கிரண் அளித்த பேட்டியில், “ஜெயிலர் படத்தின்முதல் நாள் ஷூட்டிங்கிற்கு சீக்கிரமாகவே நெல்சனை எழுப்பி அனுப்பி வைத்தவர் விஜய்தான். ஷூட்டிங்கிற்கு அரை தூக்கத்தோடு வந்த நெல்சனிடம் நான் என்ன ஆச்சு என்று கேட்டேன். அட ஏன் ப்பா விஜய் சார் காலைலயே ஃபோன போட்டு சீக்கிரம் ஷூட்டிங் போனு சொல்லி அனுப்பிட்டாரு என சொன்னார்” என்று கிரண் அந்தப் பேட்டியில் கூறினார்.





