நடிகர் சரத்குமார் புலன்விசாரணை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்றவர். அந்த படத்தின் இயக்குநர் ஆர்கே செல்வமணி, வில்லன் நடிகரை தேடிக்கொண்டிருந்த நேரத்தில், சரத்குமாரை வில்லனாக சிபாரிசு செய்தததே அந்த படத்தின் நாயகன் கேப்டன் விஜயகாந்த் தான். அடுத்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் சரத்குமார் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் சில படங்களில் வில்லனாக நடித்த சரத்குமார் சேரன் பாண்டியன் படத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். சாமுண்டி, பெரிய கவுண்டர் பொண்ணு, சூரியன், கேப்டன் மகள், சூரியவம்சம், நாட்டாமை போன்ற படங்களால் அவர் முன்னணி ஹீரோவானார். இப்போது குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார். சமீபத்தில் போர்த்தொழில், வாரிசு, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்திருந்தார்.
சினிமா நடிகர் ஆவதற்கு முன்பே, கடந்த 1984ம் ஆண்டில் சாயாதேவி என்பவரை சரத்குமார் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு வரலட்சுமி, பூஜா என்ற 2 மகள்கள் உள்ளனர். ஒரு கட்டத்தில் சாயாதேவியை, சரத்குமார் விவகாரத்து செய்து இருவரும் பிரிந்துவிட்டனர். அவர்களது மகள்களில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தமிழில் பல படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
சரத்குமார் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்டவர். இப்போது சமத்து மக்கள் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். வயது 70 ஆன நிலையிலும் இன்னும் அதே கம்பீரமான தோற்றத்தில் காணப்படுகிறார். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகர் சரத்குமார் பேசியிருந்தார். அவர் கூறுகையில், எங்கள் குடும்பம் மீது கடவுள் கருணையுடன் இருக்கிறார். என் முதல் மனைவி சாயாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்பும், எங்களது பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக்கொள்கிறார். அதேபோல் மகள் வரலட்சுமியை, உன் அப்பாவிடம் பேசக்கூடாது, அப்பா வீட்டுக்கு போகக்கூடாது என வரலட்சுமியை அவர் கட்டுப்படுத்தவில்லை
நாங்கள் இருவரும் பிரிவதற்கு அப்போது சில காரணங்கள் இருந்தன. அதனால் நாங்கள் இருவரும் அவரவர் பாதையை தனித்தனியாக தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மற்றபடி எங்களுக்குள் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம், என்று கூறியிருக்கிறார் நடிகர் சரத்குமார்.





