தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். அப்போது அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. குறிப்பாக சேரன் பாண்டியன் சூரியன் நாட்டாமை நட்புக்காக சூரியவம்சம் போன்ற படங்கள் சரத்குமாருக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தன.
ஆனால் ஒரு கட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய சரத்குமார் நடிப்பில் ஆர்வமின்றி அரசியலில் அதிக ஆர்வம் காட்டினார். நாளடைவில் அவரால் அரசியலிலும் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. சினிமாவிலும் அவரது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களில் தமிழ் படங்களில் தொடர்ந்து சரத்குமார் நடித்து வருகிறார். போர்த்தொழில்பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 சமீபத்தில் வெளியான டியூட் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாஜகவில் சரத்குமார் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சரத்குமார் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது ஏய் படத்தில் நடிகை நமீதாவுடன் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்தது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். கடந்த 2004ம் ஆண்டில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்த ஏய் என்ற படம் வெளியானது.
இதில் அர்ஜூனா அர்ஜூனா என்ற பாடல் காட்சியில் சரத்குமாரும் நமீதாவும் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தனர். இதுகுறித்து நடிகர் சரத்குமார் அந்த நேர்காணலில் கூறியதாவது, ஏய் படத்தில் வருகிற அர்ஜூனா அர்ஜூனா பாடல் ஷூட்டிங்கின் போது சுந்தரம் மாஸ்டரிடம் இது ரொம்ப அசிங்கமா இருக்கு, நான் பண்ண மாட்டேன் என்று சொன்னேன்.
ஆனால் அவர் நான் சொன்னதை கேட்கவில்லை. அதை செஞ்சுதான் ஆகணும் என்று மாஸ்டர் உறுதியாக சொல்லிட்டார். அதனால் அந்த பாடல் காட்சியில் விருப்பமே இல்லாமல் நடித்தேன். இப்பவும் இந்த பாட்டைப் பார்த்தால் வீட்டில் என்னை வைச்சு செய்வாங்க. என்ன டாடி உங்களுக்கு அசிங்கமா இல்லையா? நீங்க சொல்ல மாட்டீங்களான்னு என்கிட்ட கேட்டாங்க என்று நடிகர் சரத்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





