நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இப்போது அவர் கடைசியாக நடித்துள்ள ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரிக்கு வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகை நேரத்தில் இந்த படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக பாஜக கட்சிகளை எதிர்த்து நடிகர் விஜய் தீவிர அரசியல் நடத்தி வருகிறார். திமுகவை பாயாசம் என்றும் பாஜகவை அவர் பாசிசம் என்றும் விமர்சிப்பது அக்கட்சியினரிடையே பெரிய கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதனால் ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதில் வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். ஏற்கனவே ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை வினியோகம் செய்வதாக இருந்து பிறகு பின்வாங்கி விட்டார். அதுவும் ரூ. 100 கோடி விலை என்பது வினியோகஸ்தர்களுக்கு மலைப்பை தந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கலவையான விமர்சனங்களே இருந்து வருகின்றன. குறிப்பாக திமுக அதிமுக அல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வருவது சிறப்பு என்று ஒரு தரப்பினர் கூறினாலும், விஜய் ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன மாற்றத்தை தரப்போகிறார் என்றும் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சரவணனிடம், தமிழ் சினிமாவில் இருந்த பெரிய ஹீரோ நடிகர் விஜய், அரசியலில் குதித்திருக்கிறார். ஆனால் ஆளும்கட்சியை பார்த்து பலரும் விஜய்க்கு ஆதரவு தர அச்சப்படுகின்றனர். அவரது அரசியல் வருகை குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நடிகர் சரவணன் கூறியதாவது, என்னை பொருத்த வரை விஜய் தம்பி ஜெயிக்கணும் என்றே நினைக்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அவர் இப்ப வரைக்கும் கரெக்ட் ஆக தான் செய்துக்கொண்டு இருக்கிறார். அவர் பதவிக்கு வந்து என்ன செய்கிறார் என்பதை பார்த்துவிட்டு தான் அவரை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்று நடிகர் சரவணன் கூறியிருக்கிறார்.





