கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் விஜய் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். கடந்த முறை திமுக ஆட்சி நடத்திய நிலையில் இந்த முறை அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. விஜய் தனித்து நின்று இப்படி ஒரு வெற்றியை பெற்றது திமுக அதிமுக கட்சிகளுக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.
இதற்கிடையே நடிகர் சத்யராஜ் தொடர்ந்து திமுக ஆதரவாளராக மேடையில் பேசி வருகிறார். சட்டசபை தேர்தல் நேரத்திலும் கூட திமுக மேடைகளில் தவெக தலைவர் விஜயை கிண்டலடித்து பேசினார். தமிழ்நாட்டை திறமையாக ஆட்சி செய்ய தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். நீங்க சினிமாவில் தொடர்ந்து நடிங்க விஜய். உங்க படம் பார்த்தா தான் எனக்கு தூக்கம் வரும் என்றெல்லாம் கலாய்த்து பேசியிருந்தார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் கடந்தாண்டில் இணைந்தார். அவருக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் முக்கிய பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் அவர் போட்டியிட விருப்ப மனு அளித்தும் திமுக தலைமை அவருக்கு வேட்பாளராக வாய்ப்பு தரவில்லை. இது கடும் ஏமாற்றம் என்றாலும் 2031ல் கிடைக்கும் என்று திவ்யா காத்திருக்கிறார்.
இந்த சூழலில் திமுகவில் உள்ள தனது மகளுக்கு ஆதரவாகவும் ஸ்டாலின் மீது கொண்ட அபிமானத்தினாலும் திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசி வருகிறார். ஆனால் இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக தான் ஆரம்பத்தில் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட சத்யராஜ் அதிமுக பக்கம் போகாமல் திமுக விசுவாசியாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, திமுக ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் எப்போது ஆளுங்கட்சி தான். ஏனென்றால் ஆளும் கட்சியை வழிநடத்துவதே திமுக தான். ஏனென்றால் யார் ஆட்சி செய்தாலும் திமுக போட்டுக் கொடுத்த பாதையில் தான் ஆட்சியை நடத்தி ஆகணும்.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தால் ஒட்டிக்கிறதும் எதிர்கட்சியாக இருந்தால் பயந்து பம்மிட்டு போகிற கட்டப்பா நான் அல்ல. திமுகவின் கட்டப்பாவாக கூட என்னை எடுத்துக்கோங்க. நாம வாங்கி கொடுத்த ஆட்டோவுல வேற ஏதோ ஒரு கொடி பறக்குது. அது எவ்வளவு நாள் பறக்குதுன்னு பார்ப்போம் என்று நடிகர் சத்யராஜ் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





