தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வருகிற 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி, புதிய நீதிக்கட்சி சார்பில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் அவர் மோதுகிறார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, என்னை பற்றி குறை சொல்ல எதிர்கட்சிக்காரர்களிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் என்றால் நான் வெளியூர்காரன் என்கின்றனர். நான் வெளியூர்காரன் எல்லாம் கிடையாது. இனிமேல் நான் மதுரைக்காரன். மதுரையில் வீடு பார்த்துவிட்டேன். இங்கேதான் இனி குடியிருக்க போகிறேன்.
மாதத்தில் 15 நாட்கள் என்னுடைய வாழ்க்கை இங்குதான். அதனால் இனிமேல் என்னை யாராவது வெளியூர்காரன் என்று சொன்னால் அது பழமையான வாதம். தூத்துக்குடியில் எம்பி ஆக ஜெயிச்ச கனிமொழி என்ன தூத்துக்குடிக்காரங்களா?
அவங்களே சென்னையை சேர்ந்தவங்க. வேட்பு மனுதாக்கல் செய்யும்போது தான் அவங்க தூத்துக்குடிக்கே வந்தாங்க. அவங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் யார் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். யார் என்பது முக்கியமல்ல. எங்கிருந்து வந்தாங்க என்பதும் முக்கியமல்ல.
நல்லது செய்ய வேண்டும் என்கிற மனசு இருக்கணும். அதுதான் முக்கியம். மதுரைக்காரங்க எப்பவும் நல்லது செய்றவங்களுக்கு ஆதரவு கொடுப்பாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்குது. என்னுடைய பூர்வீகம் பழனி. எங்க அம்மாவோட பூர்வீகம் திருச்சி. நான் பிறந்தது ஈரோடு. வளர்ந்தது கோயம்புத்தார். நான் பொழப்பு நடத்தறது சென்னை.
இப்போது வந்திருப்பது மதுரை. இதுல என் சொந்த ஊருன்னு எதைச் சொல்வீங்க? தமிழ்நாடு நான் என் ஊர். தமிழ்நாட்டில் தான் மதுரை இருக்கிறது. அதனால் மதுரை தான் இனி என்னுடைய ஊர் என்று செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறினார். இயக்குனர் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக களத்தில் உள்ள நிலையில் அவரது மனைவி குஷ்புவும் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.





