சினிமாவில் பிரபல நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மகன்கள் அல்லது மகள்கள் சினிமாவில் நடிக்க வருகின்றனர். தந்தை அல்லது தாயார் சினிமா பின்புலம் கொண்டவராக பிரபலமானவராக இருந்தால் எளிதில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. எளிதில் வண்ணத் திரைக்கு வந்து விடுகின்றனர்.
அப்படி இயக்குனர் பி வாசு மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்குள் வந்தவர்தான் சக்தி. சின்னதம்பி நடிகன் இது நம்ம பூமி உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சக்தி, தொட்டால் பூ மலரும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். ஆனால் அவரால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. அதே நேரத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி கடுமையான விமர்சனத்துக்கும் ஆளானார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பி வாசு மகன் சக்தி கூறியதாவது, சின்ன வயதில் இருந்தே வாழ்க்கையில் நான் கஷ்டங்களை அறியாதவன். வசதியான வீட்டில் வளர்ந்தவன். எல்லாவிதங்களிலும் சந்தோஷமாக வாழ்ந்தவன். ஆனால் நடிகனாக வந்த பிறகு 9 ஆண்டுகளில் நான் வாழ்க்கையில் படாத கஷ்டங்களே இல்லை.
சொந்த வாழ்க்கையிலும் சினிமா தொழில் வாழ்க்கையிலும் மிக மோசமான கஷ்டங்களை நான் அனுபவித்தேன். நிறைய இடங்களில் மிக மோசமாக தோற்றுப் போனேன். அதனால் நிறைய மன உளைச்சல் ஏற்பட்டது. விரக்தியின் எல்லைக்கே சென்றேன். ஒரு கட்டத்தில் நான் பயங்கரமாக மது பழக்கத்துக்கு அடிமையானேன். எந்நேரமும் குடிபோதையில் இருந்தேன்.
என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பலவிதமான கஷ்டங்களுக்கு பலரும் காரணமாக இருந்திருக்கின்றனர். ஆனால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால் என்னுடைய தந்தை பி வாசு எல்லா நேரங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்தார். நடிகர் ரஜினிகாந்தும் கூட என்னுடைய வாழ்க்கையில் அதிக அக்கறை காட்டி சப்போர்ட் செய்தார்.
வாழ்க்கையில் எல்லோருமே தவறுகளை செய்கின்றனர். ஆனால் எல்லோரும் கதவை மூடி வெச்சுக்கிட்டு செய்ற வேலையை நான் கதவை திறந்து வெச்சுக்கிட்டு செய்தேன். அதை படம் பிடிக்க கேமராவுடன் வந்து விட்டனர். வீட்டுக்குள்ளேயும் வந்து விட்டனர். ஆனால் நான் அவர்களை குறை சொல்ல மாட்டேன். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு சாப்பாடு என்று அந்த நேர்காணலில் இயக்குனர் பி வாசு மகன் சக்தி பேசியிருக்கிறார். அப்போது பி வாசுவும் அவருடன் இருந்தார்.





