தமிழ் திரையுலகை போலவே தெலுங்கு திரை உலகிலும் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளனர். சிரஞ்சீவியில் தொடங்கி, நாகர்ஜுனா, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ராம்சரண், பிரபாஸ், பவன் கல்யாண், விஜய தேவரகொண்டா என ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் இளம் நடிகராக இருப்பவர் சர்வானந்த்.
சர்வானந்த் 2004 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று வந்த அவருக்கு, பிறகு நடிகராக வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் அவ்வப்போது ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
தமிழில் காதல்னா சும்மா இல்ல எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்திருந்த ரவி கிருஷ்ணா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அத்துடன் சர்வானந்துக்கும் தமிழில் இந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.
இதன்பிறகு எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவும் இரண்டு ஹீரோ கொண்ட சப்ஜெக்ட் தான் என்றாலும், அதில் சர்வானந்திற்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஜெய் உடன் நடித்திருந்த அவர் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் அவர் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்காமல் போனது. வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் தெலுங்கு திரை உலகில் பிஸியானார் சர்வானந்த். தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவர் நடித்து இருந்தார்.
இப்படியான சூழலில் கடந்த ஆண்டு அவருக்கு ரட்சிதா ரெட்டி என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. ஜெய்ப்பூரில் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தைக்கு லீலாதேவி என்று அவர் பெயர் வைத்திருக்கிறார். பெண் குழந்தையை பெற்றெடுத்த தம்பதியரை திரையுலகில் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.





