தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சிங்கம்புலி. மனம் கொத்திப் பறவை படத்தில் டீக்கடை உரிமையாளராக நடித்திருப்பார், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மனநிலை சரியில்லாதவராக காக்கி டவுர் போட்டுக்கொண்டு சிங்கம்புலி நடித்திருப்பார். அதே போல் முத்துக்கு முத்தாக படத்தில் மினிபஸ் கண்டக்டராகவும் வித்யாசமான ஒரு நடிப்பை சிங்கம்புலி தந்திருப்பார்.
ஆனால் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில், ஒரு வில்லங்கமான கேரக்டரில் சிங்கம்புலி நடிப்பு ரசிகர்களை மிரட்சியடைய செய்தது. காமெடி நடிப்பில் சிரிக்க வைத்த சிங்கம்புலியின் இந்த நடிப்பு உண்மையில் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. படத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பு பெரிய பலமாக இருந்தது.
நடிகர் சிங்கம்புலி நடிகர் மட்டுமல்ல, திரைப்பட இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாது. அஜீத்குமார் நடித்த ரெட் படத்தின் இயக்குனர் சிங்கம் புலிதான். சூர்யா ஜோதிகா நடித்த மாயாவி படத்தின் இயக்குனரும் அவர்தான். பிதாமகன் ரேணிகுண்டா படங்களின் கதை வசனம் எழுதியவரும் சிங்கம்புலிதான். மிளகா நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் போன்ற பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.
நேர்காணல் ஒன்றில் நடிகர் சூரி குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி கூறியதாவது, நடிகர் சூரியை நான் கண்ணன் வருவான் என்ற படத்தின் ஷூட்டிங்கில்தான் பார்த்தேன். நான் அந்த படத்தில் கோ டைரக்டராக இருந்தேன். சுந்தர் சி டைரக்ஷன் படம். கார்த்திக், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தார்.
அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது சூரி ஒரு டெக்னிஷீயனா அங்கு வந்தார். அப்போது நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்த போது அவரும் மதுரைக்காரர் என தெரிந்தது. நடிப்பில் ஆர்வம் உள்ளவர் என்பதையும் தெரிந்துக்கொண்டேன். அந்த படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணியுடன் சூரியை நடிக்க வைத்தேன். அதை இப்போதும் நடிகர் சூரி மறக்காமல் பேட்டிகளில் சொல்லிக்கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
நடிகர் சூரி விடுதலை விடுதலை 2 படங்களில் நடித்த போது பல மாதங்களாக சாப்பிடவில்லை. சிக்ஸ் பேக் வைத்திருந்ததால் சாப்பாட்டை கண்ணில் கூட பார்க்க முடியவில்லை. காமெடி நடிகராக 20 நாட்களுக்கு ஒரு படத்தில் நடித்து விடலாம். படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அடுத்த படங்கள் வந்துவிடும். ஆனால் ஹீரோவாக நடிப்பதில் சூரிக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. அதை எல்லாம் கடந்து அவர் ஜெயித்துக் கொண்டு இருப்பது பெருமையாக உள்ளது, என்று சிங்கம்புலி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





