நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னுக்கு வந்த இளம் நடிகர்களில் ஒருவர். துவக்கத்தில் மெரினா படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கும், இப்போது அயலான் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கும் சினிமாத்துறையில் வளர்ச்சி என்ற வித்யாசமே வேற லெவலாக தான் இருக்கிறது.
மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீம ராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை, ரெமோ, காக்கிச்சட்டை போன்ற படங்களால் அவர் சட்டென முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிப்போனார். இந்த அபார வளர்ச்சியை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்ற அளவுக்கு ரசிகர்களின் அபரிமிதமான வரவேற்பே இதற்கு காரணமாக இருந்தது.
இதையெல்லாம் விட, ரஜினியை போல சிவகார்த்திகேயனுக்கும் விரைவில் மற்றவர்களை வசீகரிக்கும் முகமும், பேச்சும், தோற்றமும் இயல்பிலேயே அவருக்கு அமைந்திருக்கிறது. அதுவும் அவரது அபார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அவரது படங்களில் நடித்த காமெடி நடிகர் சூரியும், சிவகார்த்திகேயன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். அவரும் அதில் வளர்ச்சி கண்டார்.
திருப்பூரைச் சேர்ந்த இயக்குநர் ரவிக்குமார், இன்று நேற்று நாளை படத்தை அடுத்து எடுத்த 2வது படம் அயலான். ஆறு ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் திரைக்கு வந்தது. இந்த படம் வெளிவர, மொத்தம் 27 கோடி ரூபாயை மொத்தமாக கொடுத்து கடனை அடைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆனாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு இல்லை. குறிப்பாக தமிழகத்தில் பல தியேட்டர்களில் பொங்கல் விடுமுறை நாட்களில் வந்த ரசிகர்கள் கூட்டம் இப்போது காணப்படவில்லை. அதனால் தியேட்டர் தியேட்டராக சென்று சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்தித்தாலும் பெரிய அளவில் படம் வசூலை குவிக்கவில்லை.
தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளாவிலும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அயலானை குழந்தைகளும் கூட ரசிக்கவில்லை. அதேபோல் ஓவர்சீஸ் உரிமம் பெற்ற வெளிநாடுகளிலும் அயலான் படத்துக்கு போதிய ஆதரவு இல்லை. இந்த படத்தில் நடிக்க சம்பளமும் வாங்காத நிலையில், மீண்டும் பெரிய கடன்களில் சிவகார்த்திகேயன் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இடியாப்ப சிக்கலில் இருந்து மீண்டுவர வழி தெரியாமல் அவர் தவிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.





