தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகர்களில் மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன். அதுவும் அமரன் திரைப்படம் அவரை, சிகரத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டது. ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி ஒரு மாஸ் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தனுஷ் சூர்யா என முன்னணி நடிகர்கள் யாரும் 300 கோடி ரூபாய் இலக்கை எட்டாத சூழலில், அதை அசால்ட்டாக சிவகார்த்திகேயன் செய்து முடித்திருக்கிறார். இதனால் பலரும் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் இப்போதைக்கு வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன், இதே போக்கை அடுத்தடுத்த திரைப்படங்களிலும் தக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நாம் வளர்ந்து விட்டோம் இனி நமக்கு வரும் கதைகளில் மட்டும் நடித்தால் போதும் என்று இல்லாமல், முக்கியமான இயக்குனர்களிடம் தேடி தேடி சென்று கதை கேட்கிறார் சிவகார்த்திகேயன். இப்படி அவர் முயற்சித்ததன் விளைவாகத்தான் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்தி தனது 25வது திரைப்படமாக அதனை கொண்டு வந்திருக்கிறார். சென்னையில் இதன் படபிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது சிதம்பரத்தில் சூட்டிங் விறுவிறுப்பாக செல்கிறது. 1965 ஆம் ஆண்டுகளில் நடக்கும் கதைக்களம் போல் இதனை படமாக்கி வருகிறார் இயக்குனர் சுதா.
இந்தி திணிப்புக்கு எதிராக அன்றைய காலகட்டம் இருந்த சூழலில், அதை கண்முன்னே காட்சிப்படுத்துவதற்கான முயற்சியில் ஒட்டுமொத்த படக்குழுவும் ஈடுபட்டு வருகிறார்கள். வில்லனாக ரவி மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா மற்றும் ஸ்ரீ லீலாவும் நடிக்கிறார்கள். அண்மையில் வெளியான இதன் அறிமுக டீசர் பலரையும் கவர்ந்தது.
இதன் சூட்டிங் சென்று கொண்டிருக்கும்போதே தனது அடுத்த படத்திற்கான வேலைகளிலும் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். இதில், சண்டை மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அன்பறிவ் சகோதரர்கள், கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்கள். இதன் சூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இதன் பிறகு அன்பறிவ் சகோதரர்களுடன் சிவகார்த்திகேயன் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





