இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார். விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக வெளியான இந்த திரைப்படம், நாட்கள் செல்ல செல்ல சூடு பிடித்து விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமா இதுவரை காணாத புதிய கதைக்களத்தை கையில் எடுத்த இயக்குனர் ரவிக்குமார், டைம் டிராவல் எந்திரத்தை கொண்டு பிசிறு தட்டாமல் விறுவிறுப்பான திரைக்கதையை ரசிகர்களுக்கு கொடுத்தார். தற்போது வெளியாகும் டைம் டிராவல் திரைப்படங்கள் அனைத்தும், இன்று நேற்று நாளை திரைப்படத்தையே ரசிகர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

முதல் படத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்ட இயக்குனர் ரவிக்குமார், அடுத்ததாக எந்த மாதிரியான படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் அறிவிக்கப்பட்டது தான், அயலான் ப்ராஜெக்ட். சயின்ஸ் பிக்சன் காமெடி ஜானரில் இந்தத் திரைப்படம் உருவாகுவதாகவும், சிவகார்த்திகேயன்தான் ஹீரோ என்றும் அறிவிக்கப்பட்டதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
2016 ஆம் ஆண்டு அயலான் அறிவிப்பு வெளியான நிலையில், பூமிக்கு ஏலியன்கள் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு வரி கதையுடன் படம் நகர்வதாக தெரிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க, இஷா கோபிக்கரும் படத்தில் இணைந்தார். அந்த சமயத்தில் அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருந்ததால், படப்பிடிப்பு தாமதமாகவே ஆரம்பித்தது.

கே ஜே ஆர் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஏஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை சூட்டிங் பணிகள் நடக்க, பல்வேறு பிரச்சனைகளால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் வி எஃப் எக்ஸ் பணிகள் அதிகம் இருந்ததால், படத்தின் வெளியீட்டு தேதி உறுதியாக சொல்லப்படவே இல்லை.
அயலானிலிருந்து வேற லெவல் சகோ என்ற ஒரு பாடல் மட்டுமே வெளியான நிலையில், வேறு எந்த அப்டேட்டுமே கிடைக்காததால் ஒரு கட்டத்தில் படம் வெளியாகுமா என்ற சந்தேகமும் இருந்தது. இருப்பினும் அயலானை வெளியிடுவதில் தீவிரமாக முயற்சி செய்து வந்த சிவகார்த்திகேயன், படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது வி எஃப் எக்ஸ் பணிகளும் வேகமெடுத்து உள்ள நிலையில், நிச்சயம் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் மாவீரன் பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், அயலான் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். மாவீரன் திரைப்படம் போல் புதிய கதைகளத்துடன் அயலான் இருக்கும் என்றும், நிச்சயம் ரசிகர்களுக்கு இது புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், அயலானுக்கான இசைப்பணியில் ஏ ஆர் ரகுமான் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.





