தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே நடித்து வரும் படத்துக்கு மதராஸி என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் பல படங்களுக்கு பழைய படங்களின் டைட்டில்களை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்நீச்சல் ஹீரோ காக்கி சட்டை மாவீரன் அமரன் வேலைக்காரன் பராசக்தி மதராஸி என சிவகார்த்திகேயன் ஏற்கனவே வந்த படங்களின் பெயர்களில் உள்ள படங்களிலேயே நடிக்கிறார். இது ஒரு வித சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அப்பா தாஸ் சிறைத்துறை போலீஸ் அதிகாரியாக இருந்தவர். திருச்சியில்தான் சிவகார்த்திகேயன் தனது பள்ளி கல்லூரி நாட்களை கழித்தார். பிறகு விஜய் டிவியில் காம்பியராக பணிசெய்தார். பிறகு மெரினா படம் மூலம் சினிமா நடிகராக மாறினார்.
சில வாரங்களுக்கு முன் திருச்சியில் உள்ள காம்பியன் பள்ளியில் 90ம் ஆண்டு விழா நடந்தது. இந்த பள்ளியில்தான் சிவகார்த்திகேயன் படித்திருக்கிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் என்ற முறையில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, இந்த பள்ளியில் படித்த நாட்களை மறக்க முடியாது. படிப்பில் பாராட்டு சான்றிதழ் பெறா விட்டாலும் 100 நாட்கள் வருகை புரிந்த மாணவன் என்ற பாராட்டு சான்றிதழை பெற்றிருக்கிறேன்.
இந்த பள்ளியில் பலவிதமான கலைநிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படும். ஆனால் எனக்கு மேடை ஏற ஆசை இருந்தாலும் பயம் தயக்கம் காரணமாக தவிர்த்து விடுவேன். 9ம் வகுப்போ 10ம் வகுப்போ படிக்கும்போது என்னுடைய மிஸ் என்னை கண்டிப்பாக ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். அதுவும் கேர்ள் கெட்டப்பில் நடிக்க கூறினர்.
அப்போது எனக்கு முதன்முறையாக பெண் வேடத்தில் நடிக்க சொன்னார்கள். அதுதான் பிற்காலத்தில் நான் ரெமோ படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடிக்க உதவியாக இருந்தது என்றுகூட சொல்வேன். திறமை எல்லாம் காட்டலாம் என்றாலும் முதலில் பயம் தயக்கம்தான் அதை தடுக்கும். இப்போது உள்ள மாணவர்கள் அந்த பயம் தயக்கத்தை உடைத்து இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள், என்று அந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.





