நடிகர் சிவக்குமார் சிறந்த ஓவியக்கலைஞர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியின் 175வது ஆண்டு விழா மற்றும் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவர் நடிகர் சிவக்குமார் பேசியதாவது, இந்தியாவில் உள்ள ஓவியக் கல்லூரிகளில் 175வது ஆண்டு விழா நடைபெறும் ஓவியக் கல்லூரி இதுதான். நான் ஃபிரஷை நம்பி சில காலம் தான் இருந்தேன்.
ஆனால் இங்கு படித்தவர்கள் அனைவரும் ஃபிரஷை மட்டுமே நம்பி இருந்தவர்கள். நான் 24 வயதில் நடிக்கச் சென்று 40க்கு மேற்பட்ட கதாநாயகிகளுடன் டூயட் பாடிவிட்டு தற்போது நடிப்பை விடுத்து பேச்சாளராக உள்ளேன். நாங்கள் படித்த காலத்தில் தான் உழைப்பாளர் சிலையை வடிவமைத்தனர். என்னுடன் படித்த சக மாணவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. என்னுடன் படித்த சக நண்பர்கள் பலர் மதுரையில் உள்ளனர். அங்கு அவர்கள் வீட்டில் தங்கி மதுரையில் பல இடங்களுக்குச் சென்று ஓவியங்களை வரைந்துள்ளோம்.
நாங்கள் படிக்கும் போது 10 மணி நேரத்துக்கு மேலாக ஓவியத்தை வரைந்தோம். நான் பிறந்த ஊரில் அந்த காலத்தில் பள்ளிக்கூடம் இல்லை. மின்சாரம் இல்லை. கழிப்பறை வசதி கிடையாது. நான் 14 வயதில் எம்ஜிஆர் படத்தை வரைந்தேன். 2006ம் ஆண்டில் சூர்யாவுக்கு திருமணம் நடப்பதற்கு முன்பு நடிகை பத்மினியை சந்தித்து நான் வரைந்த ஓவியத்தை அவருக்கு பரிசளித்தேன். அந்த ஓவியத்தை பார்த்துவிட்டு நான் இவ்வளவு அழகாக இருந்தேனா என்று பத்மினி வியப்புடன் கேட்டார்.
என் சிறுவயதில் நடிகர் ஜெமினி கணேசனை ஓவியமாக வரைந்தேன். பிற்காலத்தில் அவருடன் இணைந்து படங்களில் நடித்தேன். 1961ம் ஆண்டில் அண்ணா சாலையில் உள்ள கடைகளை ஓவியமாக வரைந்தேன். ஸ்ரீரங்கம் கோவிலில் அமர்ந்து கோபுரத்தை வரைந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னை வெளியேற்றி விட்டார். கோவிலுக்கு வெளியே வந்து ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தை வரைந்து முடித்தேன். 1963ம் ஆண்டில் திருவண்ணாமலை சென்று அங்குள்ள கோவில் கோபுரம், தீபம் ஏற்றும் மலை மீது ஏறி 8 மணி நேரம் கோவில் கோபுரங்களை வரைந்தேன்.
1972ம் ஆண்டில் திரைப்படத்தில் நடிக்கலாம் என்று மும்பை சென்றபோது கேட்வே பகுதியை வரைந்து கொண்டிருந்தோம். அங்கு வந்த காவலர்கள் நாங்கள் அனுமதி இல்லாமல் அங்கு வந்து ஓவியம் வரைந்ததாக கூறி எங்களை கைது செய்ய வந்தனர். ஓவியங்களை காண்பித்த போது காவலர்களே எங்களை காஃபி சாப்பிட அழைத்துச் சென்றனர்.
பெரியார் படத்தை வரைந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியும் காண்பித்தேன். அப்போது என் படத்தை எல்லாம் நீ வரையவில்லையா? என்று கேட்டார். உடனே அவருடைய படத்தை வரைந்து காண்பித்தேன். அவர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். என் பிள்ளைகள் சினிமாவில் இருப்பதால் நான் வரைந்த ஓவியத்தை புத்தக வடிவில் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்று நடிகர் சிவக்குமார் விழாவில் பேசினார்.





