நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க ஒரு நடிகராக கடந்த 1980களில் இருந்தவர். சிந்து பைரவி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். சிறந்த ஓவியர். சிறந்த பேச்சாளர். மணிக்கணக்கில் சொற்பொழிவு செய்யும் ஆற்றல் மிக்கவர். இந்த வயதிலும் 100 பூக்களின் பெயர்களை வரிசையாக தடுமாறாமல் சொல்லும் நினைவாற்றல் மிக்கவர்.
ஆனால் சமீபகாலமாக அடிக்கடி கடும் விமர்சனங்களில் சிக்கிக் கொள்கிறார். குறிப்பாக அருகில் வந்து அவருடன் செல்பி எடுக்க முயற்சிக்கும் ரசிகரின் செல்போனை தட்டி விடுவது, மேடையில் பொன்னாடை போர்த்த வந்தால் அதை பிடுங்கி எறிவது என அவர் ஏதாவது ஒரு விஷயத்தில் கோபத்தை வெளிப்படுத்துவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், தனது மகன் சூர்யா குறித்து பெருமையாக பல விஷயங்களை பேசினார். அப்போது அவர், என் மகன் சூர்யாவுக்கு முன்னாடி சிக்ஸ்பேக் வைத்து நடித்த நடிகர் யாருமில்லை என்று பேசியிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் பெரிய பேசு பொருளாக மாறியது. ஏனெனில் தமிழ் சினிமாவில் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிகர் விஷால் நடிகர் தனுஷ் குறிப்பாக நடிகர் ரியாஸ்கான் போன்றவர்கள் ஏற்கனவே சிக்ஸ்பேக் உடலமைப்பில் இருந்து சில படங்களில் நடித்திருக்கின்றனர். அதே போல் காமெடி நடிகர் சூரி கூட சீமராஜா படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து ஒரு காட்சியில் நடித்திருந்தார்.
அதுவும் குறிப்பாக நடிகர் சூர்யாவுக்கு முன்பே சத்யம் என்ற படத்தில் நாயகனாக நடித்த விஷால் சிக்ஸ்பேக் வைத்து நடித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. இப்படி விஷால் அர்ஜூன் வில்லன் நடிகர் ரியாஸ்கான் போன்றவர்களுக்கு பிறகுதான் சூர்யா சிக்ஸ்பேக் வைத்து நடித்திருந்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஷால் கூறுகையில், முதன் முதலில் பொல்லாதவன் படத்தில் நடிகர் தனுஷ் சிக்ஸ்பேக் வைத்து நடித்திருந்தார். பிறகு சத்யம் மதகஜ ராஜா படங்களுக்காக நான் சிக்ஸ்பேக் வைத்தேன். அதை மறந்துவிட்டார்கள் என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். பொல்லாதவன் படம் 2007ம் ஆண்டில் வெளியானது. சத்யம் படம் 2008ம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியானது. அதே ஆண்டில் நவம்பரில்தான் சூர்யா சிக்ஸ்பேக் வைத்து நடித்த வாரணம் ஆயிரம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2003ம் ஆண்டில் வந்த வின்னர் படத்திலேயே வில்லன் நடிகர் ரியாஸ்கான் சிக்ஸ்பேக் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.





