காமெடி நடிகராக இருந்த நடிகர் சூரி இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மாறி தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்தாண்டில் வெளியான மாமன் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார் மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாகி வரும் இந்த படம் குறித்து நடிகர் சூரி முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
மண்டாடி படம் குறித்து நடிகர் சூரி கூறியதாவது, ஜல்லிக்கட்டு போல தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுதான் படகு போட்டி. மீனவ மக்களின் பண்பாட்டு அடையாளமாகவே படகு போட்டி நடத்தப்படுகிறது. அங்கே எந்த ஒரு விழாவாக இருந்தாலும் ஹைலைட்டாக இந்த படகு போட்டியை தான் நடத்துவாங்க.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பாய்மர படகு போட்டி நடக்கிறது. 150 முதல் 200 படகுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் 20 கடல் மைல் தொலைவில் பாய்மர படகுகள் ரேஸ் நடக்கும். நடுக்கடலில் 20 மைல்களுக்கு அப்பால் கொடியோட சில எல்லைப் படகுகளை நிறுத்தி வைத்திருப்பார்கள். நம்ம படகு அந்த எல்லைப் படகை சுத்திட்டு திரும்பவும் கரைக்கு வர வேண்டும்.
அப்படி படகுகள் வருவதை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்து கொண்டாடும். மூன்று மணி நேரத்துக்கு மேல நடக்கும் இந்த போட்டி சாதாரணமானது கிடையாது. திரும்பி வரும்போது நாம உசுரோட வரணும். ஏன்னா பல படகுகள் இந்த போட்டியின் போது கடலில் கவுந்து விடும். இல்லைன்னா பாதி பேருக்கு காயம் ஏற்பட்டு விடும்.
சுருக்கமாக சொன்னால் இது மனுஷனுக்கும் இயற்கைக்கும் நடக்கிற போட்டின்னு கூட சொல்லலாம். இந்த ரேஸ்ல மனிதனோட சூழ்ச்சியையும் வெல்லனும். அதே சமயத்துல கடலில் அடிக்கிற காற்றையும் வெல்லனும். இப்படி சவால்கள் நிறைந்ததுதான் இந்த படகு போட்டி. ஒரு அணியில் 6 பேர் இடம் பெறுவார்கள். இந்த அணியின் கேப்டன் தான் மண்டாடி என்று அழைக்கப்படுகிறார்.
கேப்டன் தான் கடலின் நீர் வாடையை சரியாக கணிக்க முடியும். அடிக்கும் காத்துல படகை எந்த திசையில் செலுத்தணும் என்று எல்லாம் தெரிந்தவர் தான் கேப்டன். படகு போட்டியில் ஈடுபடும் மீனவர்கள் அவர்களுடைய வாழ்க்கை போராட்டம் ஈடு இணை இல்லாத அன்பு போட்டின்னு எல்லாத்தையும் சொல்லும் படமாக மண்டாடி படம் உருவாகி வருகிறது என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார்.





