தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சூரி. பிறகு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். இப்போது கருடன் கொட்டுக்காளி மாமன் போன்ற படங்களை தொடர்ந்து மண்டாடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அடுத்து அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சூரி கமிட் ஆகியுள்ளார். மண்டாடி படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் மஹிமா நம்பியார் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் சூரி பேசியதாவது, சினிமாவில் நடிக்க வர்றதுக்கு முன்னாடி என் நண்பன் ஒருத்தன் என்கிட்ட சொன்னான். பாரதிராஜா படத்துல நடிக்க ஆர்ட்டிஸ்ட் செலக்ட் பண்ணி எடுக்குறாங்க. கிராமத்து கதை. கருப்பா இருந்தால்தான் பாரதிராஜா சாருக்கு பிடிக்கும்ன்னு சொன்னான்.
அதனால பேண்ட் சட்டை போட்டுட்டு போகாம கிராமத்தான் கெட்டப்புல போங்கன்னு ஐடியா கொடுத்தான். அவன் சொன்னதை கேட்டு பட்டாபட்டி டவுசர் போட்டுட்டு லுங்கியை நெஞ்சு வரை தூக்கி கட்டீட்டு கையில மஞ்சப்பை தூக்கிட்டு நானும் என் நண்பனும் ஆடிசனுக்கு போனோம். பாரதிராஜா சாரோட ஆபீசுக்கு போனா பேண்ட் சர்ட் போட்டுட்டு ரொம்ப பேர் லைன்ல நிக்கிறாங்க.
நாங்க தனியா தெரியனும்ன்னு ஒரு ஓரமா பீடி குடிச்சிட்டு நின்னுட்டு இருந்தோம். அப்போ ரெண்டு பேர் எங்ககிட்ட வந்து வாங்கன்னு சொல்லி எங்களை தனியா கூட்டிட்டு போனாங்க. ஒரு ரூம்ல கீழ உட்கார வெச்சு நீங்கதானே கார் டயரை திருடுனீங்க? எவ்வளவு நாளா கார் டயர்களை திருடீட்டு இருக்கீங்கன்னு கேட்டாங்க.
நாங்க பதறிப் போயிட்டோம். ஐயா நாங்க பாரதிராஜா படத்தில நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவங்கன்னு சொன்னேன். அதுக்கு எதுக்குடா இப்படி வந்தீங்கன்னு கேட்டாங்க. இப்படி வந்தா தான் சான்ஸ் கொடுப்பாருன்னு சொன்னாங்க என்றேன். மரியாதையா ஓடிப் போயிடுங்க, இல்லேன்னா போலீஸ்ல புடிச்சு கொடுத்துடுவேன்னு சொன்னாங்க. ஆளை விட்டால் போதும்டா சாமின்னு அங்கிருந்து ஓடி வந்துட்டோம் என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார்.





