நடிகர் சூரி நடித்த மாமன் படம் வருகிற 16ம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் நடந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசியதாவது, மாமன் படத்தில் நடிகர் ராஜ்கிரண் நடிக்கும் ஒப்புக்கொண்டது எங்களுக்கெல்லாம் பெருமை. அதே போல் கதைக்காக சம்பளம் எதுவும் வேண்டாம் என்று சொன்ன பாடலாசிரியர் விவேக்கிற்கு நன்றி. சீமராஜா படத்திற்காக இயக்குனர் பொன்ராம் என்னை சிக்ஸ்பேக் வைத்துக்கொள் என்றார்.
அதற்காக நான் 6 மாதகாலம் கடினமாக உழைத்தேன். என்னுடைய மனைவியும் உதவி செய்தார். படம் பார்க்க தியேட்டருக்கு ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ்பேக் காட்சி திரையில் 59 வினாடிகள்தான் இடம் பெற்றது. அது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தாலும் அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது.
அன்று அது போன்றதொரு வாய்ப்பை எனக்கு வழங்கவில்லை என்றால் இப்போது என் மீது எனக்கு நம்பிக்கை இருந்திருக்காது. இயக்குனர் பொன்ராமுக்கு நன்றி. இந்த படத்தின் கதையை நான் எழுதியிருந்தாலும் எனது பெயர் வரவேண்டாம் என இயக்குனரிடம் சொல்லி இருந்தேன். ஆனாலும் படத்தின் கதை என எனது பெயர் இடம் பிடித்திருக்கிறது. நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம்.
இந்த படத்தில் ஒரு வசனம் இருக்கிறது. சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா பொண்டாட்டி தான் சாமி. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை, குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்த படத்தின் கதை உருவானதும் அங்கிருந்துதான்.
நான் இந்த படத்திற்கான கதையை யோசித்து எழுதவில்லை. என் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களைத் தான் சொல்லி இருக்கிறேன். தாய் மாமனை பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு சின்ன பையனுக்கும் அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை சொல்லி இருக்கிறோம். மாஸ்டர் பிரகீத் சிவன் மருமகனாக நடிக்கிறான். அவன் இந்த படத்தின் இயக்குனரின் மகன்தான் என்றும் நடிகர் சூரி கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்து வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் சூரி. பிறகு விடுதலை படம் மூலம் கதாநாயகனாக மாறினார். தொடர்ந்து சில படங்களில் நடித்த நிலையில் இப்போது மாமன் படத்தின் கதையே இவருடைய கைவண்ணம்தான் எனும் போது, சூரியின் அடுத்தடுத்த அவதாரங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கின்றனர்.





