தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். பாடகர் தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குனராவும் தனுஷ் தமிழ் சினிமாவில் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார். ப பாண்டி ராயன் ஆகிய படங்களை இயக்கிய அவரது இயக்கத்தில் நேற்று நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ராஜ்கிரண் ரேவதி நடிப்பில் முதியோர் காதலை சொன்ன படம் ப பாண்டி. இதில் பிளாஷ்பேக் காட்சியில் தனுஷ் மடோனா செபாஸ்டியன் இளம் வயது ராஜ்கிரண் ரேவதி கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்து தனுஷ் இயக்கி நடித்த அவரது 50வது படம்தான் ராயன்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படம் கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் ரூ.100 கோடி வசூலித்த 8 படங்களில் ஒன்று. இதில் நடிகர் தனுஷின் தம்பியாக நடித்திருந்தவர் சந்தீப் கிஷன். இவருக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நீ இருக்கறியே ஓலக்கொட்டாயா என்ற பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.
இப்போது நடிகர் சந்தீப் கிஷன் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் யாருடா மகேஷ் என்ற படம் மூலம் சந்தீப் கிஷன் அறிமுகமானவர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்திலும் ஹீரோவாக நடித்தவர் சந்தீப் கிஷன்தான். கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சந்தீப் கிஷன் கூறியதாவது, கடந்த ஆண்டில் தனுஷ் இயக்கத்தில் நான் நடித்த ராயன் படம் பிளாக் பஸ்டர் படமாக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் நான் நடித்த மசாக்கா என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.
இதற்கு முன் நான் ஒரு சவாலான காலகட்டத்தில் இருந்தேன். ஒரு நடிகராக பல தயாரிப்பாளர்களை அணுகி வாய்ப்பு கேட்டேன். ஆனால் அப்போது யாரும் என்னுடன் பணிசெய்ய விரும்பவில்லை. அவர்கள் என்னை நடத்திய விதம், என்னுடன் பழகிய விதம் மிகவும் மோசமாக இருந்தது. இன்று வரை அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை, என்று நடிகர் சந்தீப் கிஷன் வருத்தமாக கூறியிருக்கிறார்.





