நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை எச் வினோத் இயக்கினார். இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து இருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த 5 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி போய் உள்ளது.
இதற்கு பல அரசியல் காரணங்கள் தான் பின்னணி என்றும் கூறப்படுகிறது. அதனால் சென்சார் தரப்பில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக இன்னும் சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கின்றனர். இதற்கிடையே இந்த படமும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் திரைப்பட தயாரிப்பாளர் கே வெங்கட நாராயணாவுக்கு அமைச்சர் பதவிக்கு நிகரான தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை வழங்கி தமிழ்நாடு அரசு இன்று மாலை அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது தமிழக மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளருக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவியை தமிழக அரசு தந்திருப்பது மிகவும் முரண்பட்டதாக உள்ளது என்று பலரும் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.
ஏற்கனவே முதல்வர் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடருக்கு இதேபோல் அரசு பதவி அளித்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கு விஜய் ஆளானார். அதன்பிறகு அரசு ஆணை வெளியான ஒரே நாளில் அந்த ஜோதிடரை அரசு பதவியில் இருந்து நீக்கம் செய்தார். இப்போது திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருக்கு அமைச்சருக்கு நிகரான தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை வழங்கி இருக்கிறார்.
இதுவும் மக்களிடையேயும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது கடைசி படத்தை இயக்கிய தயாரிப்பாளர் என்கிற ஒரே காரணத்துக்காக இப்படி ஒரு அரசு பதவியை முதல்வர் விஜய் அவருக்கு அளிப்பது மிகவும் தவறான ஒரு செயல். குடும்ப அரசியல் செய்வதாக பேசிய விஜய், தனது நண்பர்கள் தொழில்முறை நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகளை அள்ளித் தருவது மட்டும் நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.





