நடிகர் சூர்யா ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். குறிப்பாக காக்க காக்க நந்தா பிதாமகன் கஜினி ஏழாம் அறிவு அயன் ஆறு சில்லுனு ஒரு காதல் சிங்கம் சிங்கம் 2 வேல் பேரழகன் என அவரது பல படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தன் நடிப்பை சிறப்பாக தருபவர் நடிகர் சூர்யா.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக அவருக்கு தொடர்ந்து தோல்வியே கிடைத்து வருகிறது. குறிப்பாக சிங்கம் 2 படம் வெளியான 2013ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை 11 ஆண்டுகளில் அவர் 13 படங்களில் நடித்திருக்கிறார். இதில் நேரடியாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று படங்களை தவிர தியேட்டர்களில் வெளியான படங்கள் அனைத்துமே தோல்விதான்.
சிங்கம் 3 பசங்க 2 என்ஜிகே மாசு என்கிற மாசிலாமணி எதற்கும் துணிந்தவன் தானா சேர்ந்த கூட்டம் அஞ்சான் காப்பான் 24 மற்றும் கங்குவா, சமீபத்தில் வெளியான ரெட்ரோ படம் வரை நடிகர் சூர்யாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றியை தரவில்லை என்பது கசப்பான உண்மைதான்.
ஆனால் இந்த படங்களில் எல்லாம் நடிகர் சூர்யாவை பொருத்த வரை அவரது நடிப்பு மிக சிறப்பாக அழுத்தமாக பிசிறு தட்டாமல் இருந்தது என்பதை ரசிகர்கள் யாரும் மறுக்க முடியாது. கதை திரைக்கதை கதைக்களம் போன்ற சில விஷயங்களே அந்த படங்களை வெற்றி பெறாமல் தடுத்தன என்பதே உண்மை.
இந்நிலையில் ரெட்ரோ படம் 6 நாட்களில் ரூ. 104 கோடி என்ற அபார வசூலை கடந்துள்ள நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ரெட்ரோ நன்றி அறிவிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேசன் என்ற கல்வி உதவிகளை வழங்கி வரும் அமைப்புக்காக ரூ. 10 கோடியை நிதியாக அளித்தார். உண்மையில் ரூ. 10 கோடி நிதியை வழங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை என்று ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியதாவது, படிப்புக்காக உதவி கேட்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகையை அளிக்கிறேன். பகிர்தலே மகிழ்ச்சி என நடிகர் சூர்யா கூறியிருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றில் எந்த ஹீரோவும் இதுவரை 10 கோடி ரூபாய் என்கிற அளவுக்கு நன்கொடை கொடுத்தது இல்லை. அந்த வகையில் நிதியுதவி அளித்ததில் நடிகர் சூர்யா புதிய சாதனை படைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.





