நடிகர் விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில்தான் நடிகர் சூர்யாவும் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை வசந்த் டைரக்ட் செய்திருந்தார். நேருக்கு நேர் படத்தில் விஜயும் சூர்யாவும் நெருங்கிய உறவினர்களாக இருந்தும் குடும்ப பிரச்னையில் இருவருக்கும் கடைசி வரை மோதல் இருந்துக்கொண்டே இருக்கும். இதில் விஜய்க்கு ஜோடியாக கௌசல்யாவும், சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரனும் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு பின் மீண்டும் பிரண்ட்ஸ் என்ற படத்தில் விஜய் சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமும் மாஸ் ஹிட் படமாக இருவருக்கும் அமைந்தது. தொடர்ந்து உன்னை நினைத்து படத்தில் சில நாட்கள் நடித்த விஜய் விலகிக் கொள்ள, விஜய் கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்தார். அந்த படமும் ஹிட் ஆனது.
நடிகர் சூர்யா கங்குவா ரெட்ரோ கருப்பு படங்களை தொடர்ந்து இப்போது தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என டைட்டில் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் படக்குழு தரப்பில் அறிவிக்கவில்லை. நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த போது விஜய் ஒரு மாதத்தில் 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தந்தார். பிறகு 10 நாட்கள் தனது சொந்த பணிகளை குறிப்பாக அரசியல் வேலைகளில் ஈடுபாடு காட்டினார். அதே போல் வாரந்தோறும் ஞாயிறு தினம் விஜய் பிரேக் எடுத்துக்கொள்வது வழக்கம்.
ஞாயிறு தினங்களில் அவர் பெரும்பாலும் ஷூட்டில் வரமாட்டார். அதே போல் காலை 7 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு கிளம்பி விடுவார். இரவு நேர ஷூட்டிங்கில் விஜய் பங்கேற்பது இல்லை. இந்த பாணியை நீண்ட காலமாகவே விஜய் பின்பற்றி வருகிறார். லியோ படத்தில் நடித்த போது மட்டுமே, லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டதால் சில நாட்கள் இரவு நேர படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது சூர்யா 46 படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யாவும் மாதத்தில் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளவும் 10 நாட்கள் தனது சொந்த வேலைகளுக்கு ஒதுக்கவும் செய்திருக்கிறார். இது ரசிகர்களிடம் பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது. மாலை 6 மணி வரை மட்டுமே படப்பிடிப்பில் இருப்பேன், ஞாயிறு பிரேக் எடுத்துக்கொள்வேன் என்று விஜயின் மற்ற பார்மூலாவுக்கும் சூர்யா விரைவில் மாறிவிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.





