தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். அந்த பட்டப் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில்தான் படத்தில் அவரது நடிப்பும், வசனங்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்கை பொருத்த வரை ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்கவும் வைப்பது என்ற ஒரு கொள்கையை தனது நடிப்பில் வைத்திருந்தார்.
அதிலும் குறிப்பாக ஹரி இயக்கத்தில் சாமி படத்தில், விவேக் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதேனும் ஒரு சமூக மூட நம்பிக்கையை, பழக்கத்தை அதில் கூறி கலாய்த்திருப்பார். அதுபோல் பல படங்களில் அவரது நடிப்பில் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு சிந்தனைகளை அவரது காமெடி மூலம் தந்திருப்பார். குறிப்பாக சுவாமி நம்பிக்கை, ராசிக்கல், வாஸ்து, ஜாதகம், மனித வாழ்க்கை என பல விஷயங்களை ஆழமாக சொல்லியிருப்பார்.
நடிகர் விவேக், தனது வாழ்க்கையில் மறைந்த மக்கள் ஜனாதிபதி ஏபிஜெ அப்துல் கலாம் அவர்கள் வழியை பின்பற்றியவர். அவர் வழிகாட்டுதலின் படி, ஒரு கோடி மரக்கன்றுகளை இந்தியா முழுவதும் நடுவது என்ற மிகப்பெரிய கனவை நனவாக்க விவேக் பாடுபட்டார். பல லட்சம் மரக்கன்றுகளையும் அவர் தமிழகத்தில் நட்டு வைத்து பராமரித்தார்.
ஆனால், கடந்த 2015ம் ஆண்டில் அவரது மகன் பிரசன்னக்குமார் மறைவு அவரை மிகப்பெரிய ஏமாற்றத்தை, விரக்தியை ஏற்படுத்தியது. எனினும் ஒரு கலைஞனாக தனது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்த அவர் படங்களில் நடித்து நல்ல கருத்துகளை, சிந்தனைகளை மனதில் விதைத்து வந்தார். ஆனால் 2021ம் ஆண்டில் எதிர்பாராத விதமாக அவர் திடீரென மறைந்தார். விவேக் மரணம் என்பது இன்றுவரை ஏற்க முடியாத ஒரு சம்பவமாகவே இருக்கிறது.
நடிகர் விவேக்குக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் தேஜசுவினி, அமிர்தா நந்தினி உள்ளனர். மகன் பிரசன்னகுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டார். விவேக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார். இந்நிலையில், நடிகர் விவேக் மகள் தேஜசுவினி திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது. பரத் என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார். விவேக் வாழ்ந்த வீட்டில் குடும்பத்தினர், முக்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் சூழ இத்திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும், மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றி, நடிகர் விவேக்கின் கனவு திட்டத்தில் தொடர்ந்து தங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நடுவதாக உறுதிமொழி ஏற்றுள்ளனர். நடிகர் விவேக் இப்போது இருந்திருந்தால், அவரது மகள் திருமணம் ஊர் உலகமே மெச்சும்படி, ரஜினி, கமல், விஜய், அஜீத் உட்பட தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு திருமண விழாவாக, கோலாகலமாக நடந்திருக்குமே என விவேக் ரசிகர்கள் கவலைப்பட்டு வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.






