இயக்குனர் இமயம் என்ற தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. சினிமாவை பாமர மக்களுக்கு ஏதோ அதிசயம் போல காட்டிக் கொண்டிருந்த இயக்குனர்களுக்கு மத்தியில் யதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை திரைக்கதையாக திரையில் வெளிச்சம் போட்டு காட்டி சினிமா மீதான பாமர மக்களின் மாயையை உடைத்து எறிந்தவர் இயக்குனர் பாரதிராஜா.
நிறைய புதுமுகங்களை தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. மோதிரக்கையால் குட்டுப்பட்ட கலைஞர்களாக அவர்களும் சினிமாவில் பிரபல நடிகர் நடிகைகளாக மாறி, தங்களது குருநாதர் பாரதிராஜாவுக்கு பெருமை சேர்த்தனர். இப்போதும் அவரது புகழை பாடிக்கொண்டு இருக்கின்றனர்.
இயக்குனர் கே பாக்யராஜ் பாரதிராஜாவின் சீடன்தான். அதே போல் ராதா ரேவதி விஜயசாந்தி பிரியாமணி ரேகா சுகன்யா நடிகர்கள் கவுண்டமணி நெப்போலியன் போன்றவர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா தான். தனது மகன் மனோஜ் குமாரையும் தாஜ்மகால் படம் மூலம் அவர் அறிமுகம் செய்தார்.
ஆனால் நடிகராக பல படங்களில் நடித்தார். பெரிய அடையாளம் கிடைக்கவில்லை. மார்கழித் திங்கள் என்ற படத்தை இயக்கினார். இயக்குனராகவும் அவரால் பெரிய வரவேற்பை தமிழ் சினிமாவில் பெற முடியவில்லை. இந்நிலையில் 48 வயதில் மண்ணுலகை விட்டு மனோஜ் பாரதிராஜா நேற்று மறைந்து விட்டார்.
சென்னை நீலாங்கரையில் பாரதிராஜா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் திரையுலகமே திரண்டு வந்தது. அப்போது நடிகர் தம்பி ராமையாக சில விஷயங்களை செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்டார். அப்போது மனோஜ் பாரதிராஜா கடுமையான மன உளைச்சலில் இருந்தார் என்று அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.
அப்போது நடிகர் தம்பி ராமையா கூறியதாவது, பாரதிராஜா என்ற மாபெரும் கலைஞனுக்கு மகனாக பிறந்ததுதான் மனோஜின் மன உளைச்சலுக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். ஒரு விஷயம் நமக்கு சரியா வரலேன்னா அடுத்த நகர்வுக்கு போய்விட வேண்டும். பெரிய மனுஷனுக்கு பிள்ளையாக பிறந்துட்டாலே இப்ப என்னய்யா பண்றே அப்பா பெயரை நீ காப்பாத்தலையா என்று கேட்டு அவர்களை ஒரு பதட்டத்துக்கு இந்த சமுதாயம் ஆளாக்கி விடுகிறது. அவர்களால் பதில் சொல்ல முடியாமல் கதவுகளை அடைத்துக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிய அந்த மன அழுத்தம்தான் 48 வயதில் அவரது மறைவுக்கு காரணமாக நான் கருதுகிறேன், என்று தம்பி ராமையா கூறியிருக்கிறார்.





