பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்த அறிவிப்பு பஃர்ஸ்ட் லுக் போஸ்டருடன் பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளான நேற்று வெளியானது. இந்த படத்துக்கு மா வந்தே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு தாயின் கீதம் என்ற கேப்ஷனும் இதில் இடம்பிடித்துள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் சிறுவயது முதல் அவர் தேசியத் தலைவரானது வரையிலான அவரது வாழ்க்கை வரலாறு சொல்லப்பட இருக்கிறது.
இதில் பிரதமர் மோடிக்கும் அவரது தாயார் ஹீராபென் மோடிக்கும் இடையிலான தாய்ப்பாசம் குறிப்பாக சொல்லப்படுகிறது. பான் இந்தியா படமாக இது உருவாகிறது, இந்த படத்தை கிராந்தி குமார் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் கே கே செந்தில்குமார் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் கலை வடிவமைப்பாளர் பாபு சிரில் சண்டை வடிவமைப்பாளர் கிங் சாலமன் உள்ளிட்டோர் பணியாற்ற உள்ளனர்.
மா வந்தே படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன் சார்பில் வீர்ரெட்டி தயாரிக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் மோடி கேரக்டரில் நடிக்கிறார். இதுகுறித்து உன்னி முகுந்தன் கூறியதாவது, பிரதமர் மோடியின் பயோபிக் படமான மா வந்தே படத்தில் நான் பிரதமர் மோடியாக நடிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பால்ய காலத்தில் நான் அகமதாபாத்தில் வளர்ந்தேன். அதனால் முதல்வராக அவரை நான் அறிவேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023ம் ஆண்டில் அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு நடிகராக எனக்கு ஊக்கம் தருகிறது. அவரது அரசியல் பயணம் அசாதாரணமானது.
இந்த படத்தில் பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கை மட்டுமல்லாது அவரது வாழ்க்கை குறித்தும் இருக்கும். ஒருபோதும் தலைவணங்காதே என அவர் கூறிய அந்த வார்த்தைகள் எனக்குள் நம்பிக்கை தருகிறது. இந்த படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் என மலையாள நடிகர் உன்னி முகுந்தன் கூறியுள்ளார்.
உன்னிமுகுந்தன் கதாநாயகனாக நடித்த மார்க்கோ, மாலிகாபுரம் உள்ளிட்ட படங்கள் அதிக கவனம் பெற்றவை. பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படங்களாகும். தமிழில் சூரி மற்றும் சசிகுமாருடன் உன்னிமுகுந்தன் கருடன் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். மோடியின் பிறந்த நாளான நேற்று மா வந்தே படத்தின் பஃர்ஸ்ட் லுக் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





