தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபாதான் இவரது நடிப்புக்கு அடித்தளம் போட்டது. அதில் இயக்குனருடன் சேர்ந்து அவர் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அதில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த யோகி பாபுவுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சுந்தர் சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கலகலப்பு திரைப்படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் யோகி பாபு. இதே போல, சூது கவ்வும் திரைப்படத்திலும் அவருக்கு ஒரு சின்ன ரோல் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை, மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கோர் செய்தார் யோகி பாபு.
இப்படியான சூழலில் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆவதற்கு அடித்தளம் இட்டது காக்கா முட்டை திரைப்படம். எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல என பேசும் யோகியின் பஞ்ச் டயலாக் அப்போது அல்ல இப்போது வரை பேமஸ் என்றே கூறலாம். இங்கிருந்துதான் தனது காமெடியில் சிக்சர் விளாச ஆரம்பித்தார் யோகி பாபு.
ரஜினி விஜய் என மூத்த நடிகர்களுடன் பயணமான அவர், குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் ஒரு காட்சியும் நடித்திருப்பார். இது மட்டுமல்ல ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இதில் யோகி பாபுவுக்கு மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை இயக்கிய மடோனா அஸ்வின் தேசிய விருதை வென்றார்.
ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் பட்டையை கிளப்பிய யோகி பாபு, தற்போது அதற்கான இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். தற்போது பேட்டி ஒன்றில் அந்த திரைப்படத்திற்கான பணிகள் குறித்து அவர் பேசி இருக்கிறார். அதில், ஒரு சிறந்த நகைச்சுவை மிக்க இயக்குனர் யார் என்றால் நான் நெல்சனைதான் சொல்வேன்.
யோகி பாபுவை விடவே கூடாது. முதல் பாகத்தில் என்னை அவர் வச்சு செஞ்சிருக்கார். இதனால இரண்டாம் பாகத்தில் நான் நிச்சயம் அவரை வைத்து செய்வேன் என்று சூப்பர் ஸ்டார் நெல்சனிடம் விளையாட்டாக கூறியிருக்கிறார். இதனால் நான் வேற பயந்துகிட்டே இருக்கேன். நாம என்ன கவுன்ட்டர் அடித்தாலும் சரி, ரஜினிகாந்த் சார் அதுக்கு மேலயும் கவுன்ட்டர் அடித்து விடுவார் என்று தெரிவித்துள்ளார்.





