தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ஒரு சாம்ராஜ்யமே நடத்தியவர் வைகைப்புயல் வடிவேலு. ஆனால் இதுவரை நடிகர் தனுஷ், வடிவேலு இணைந்து ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் தமன்னா சுமன் உள்ளிட்டோர் நடித்த படிக்காதவன் படத்தில் அசால்ட் ஆறுமுகம் கேரக்டரில் நடிகர் விவேக் நடித்திருந்தார்.
ஆனால் இந்த படத்தில் முதலில் அசால்ட் ஆறுமுகம் கேரக்டரில் நடிக்க கமிட் ஆனவர் நடிகர் வடிவேலுதான். ஆனால் 3 நாட்கள் ஷூட்டிங் வந்த வடிவேலு பிறகு கோபித்துக்கொண்டு அந்த படத்தில் நடிக்காமல் போய்விட்டார். அதன்பிறகு தனுஷ் படத்தில் நடிக்க வடிவேலுவும் ஆர்வம் காட்டவில்லை. தனுஷூம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது டி 56 படத்தில் தனுஷ் வடிவேலு முதன்முறையாக இணைந்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிக்கையாளர் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, சிவகங்கை கருப்பண்ணசாமி கோயிலில் சென்று தனுஷ் 56 படத்துக்கான கேமராவை வைத்தார்கள். ஆனால் அதற்கு அங்கு அனுமதி கொடுக்கவில்லை.
பிறகு தனுஷ் இது குறித்து பேசி கோயிலுக்கு வெளியே எடுக்கலாமா என்று கேட்டு அதற்கு அனுமதி கொடுத்தவுடன் அப்படி எடுத்திருக்கிறார்கள். அந்த பூஜையில் மொத்தம் 20 ஆடுகளை வெட்டி கிடா விருந்து வைத்திருக்கிறார்கள். கிராமத்துக் கதையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இதுவரைக்கும் தனுஷ் வடிவேலு இரண்டு பேரும் சேர்ந்து நடித்தது இல்லை.
படிக்காதவன் படத்தில் முதலில் வடிவேல் தான் நடித்தார். மூன்று நாட்கள் நடித்த அந்த சமயத்தில் வடிவேலு பயங்கரமான பிஸியில் இருந்தார். அவர் நடிக்கும் போது ரீ டேக் போய்க்கொண்டே இருந்தது. அப்போது டைரக்டர் சுராஜ், லைட்மேனை பார்த்து, சீக்கிரம் லைட்டிங் செட் பண்ணுங்க, வடிவேல் அண்ணனுக்கு நொடிக்கு நொடி காசு ஏறும் என்று சொன்னார்.
அதில் வடிவேலு கோபமாகி விட்டார். அந்த சமயத்திலும் அவர் மீண்டும் ரீ டேக் வாங்கினார். உடனே தனுஷ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. டைரக்டரிடம் இருந்து மைக்கை வாங்கி, டைரக்டர் சொன்ன மாதிரி நடித்து விடுங்க அண்ணா என்று சொல்ல வடிவேலு மேலும் டென்ஷன் ஆகிவிட்டார். உடனே அந்த காஸ்டியூமோடு ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கிளம்பி விட்டார். இதுதான் அவர்களுக்குள் நடந்த சண்டை. பிறகு படிக்காதவன் படத்திலிருந்து வடிவேல் விலகி விட்டார் என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





