ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வடிவேலுவின் கால்ஷீட்டுக்காக தவம் இருந்தனர் என்றால் அது மிகையல்ல. இயக்குர் பி வாசு நடிகர் ரஜினிகாந்திடம் சந்திரமுகி படத்தின் கதையை சொன்ன போது, முதலில் இந்த படத்தில் நடிக்கிற வடிவேலுவிடம் பேசிட்டீங்களா? அவரது கால்ஷீட் இருக்குதா என்று ரஜினியே பி வாசுவிடம் கேட்டிருக்கிறார்.
அந்த அளவுக்கு ரஜினியே கால்ஷீட் இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு நடிகர் வடிவேலு அப்போது பிஸியாக பல படங்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது தினமும் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. நடிகர் கவுண்டமணிக்கு பிறகு தினசரி சம்பளம் வாங்கிய நடிகர் வடிவேலுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி நடிப்பில் கலக்கிய அவரை கதாநாயகனாகவும் மாற்றி அழகு பார்த்தவர் இயக்குனர் சிம்புதேவன். இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற காமெடி படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்தார். முழுநீள நகைச்சுவை திரைப்படமாக வெளியான 23ம் புலிகேசி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் தெனாலி ராமன் எலி போன்ற படங்களில் வடிவேலு ஹீரோவாக நடித்திருந்தார்.
சில சம்பவங்கள் காரணமாக 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் நடிகர் விஷால் நடித்த கத்தி சண்டை படம் மூலம் டாக்டர் பூத்ரி கேரக்டரில் ரீ என்ட்ரி கொடுத்தார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சிவலிங்கா சந்திரமுகி 2 கேங்கர்ஸ் என வடிவேலு காமெடி நடிப்பு பழைய வரவேற்பை பெறவில்லை. ஆனால் குணச்சித்திர வேடத்தில் நடித்த மாமன்னன் மாரீசன் படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கின்றன.
இந்நிலையில் நடிகர் வடிவேலு சில தயாரிப்பாளர்களை போனில் அழைத்து கோரிக்கை ஒன்றை விடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகர் முரளியுடன் இணைந்து வடிவேலு நடித்த படம் சுந்தரா ட்ராவல்ஸ். இந்த படம் சமீபத்தில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதனால் தன் காமெடி காட்சிகள் நிறைந்த சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு அந்த படங்களை மறு வெளியீடு செய்து ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வாய்ப்பை உருவாக்குமாறு நடிகர் வடிவேலு கோரிக்கை விடுத்து வருகிறார். அதன்மூலம் காமெடி நடிப்பில் இழந்த இமேஜை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நடிகர் வடிவேலு நம்புகிறார். இது ஒர்க் அவுட் ஆகுமா என்பது போக போகத்தான் தெரியும்.





