தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமாவில் உச்சத்தில் இருந்த அவர் 10 ஆண்டுகள் வரை சினிமா நடிப்பில் இருந்து விலகி இருந்த போதும் அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. ஏனெனில் தொடர்ந்து அவரது காமெடி காட்சிகள் மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வந்தது.
தனிப்பட்ட முறையில் வடிவேலு மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் காமெடி நடிப்பில் அவரது உடல்மொழியும் டயலாக் டெலிவரியும் முகபாவனைகளும் வேறு எந்த காமெடி நடிகருக்கும் கைவராத ஒரு அற்புத கலைஞனாக அவர் ரசிகர்களால் விரும்பப்படுகிறார். இப்போது 2வது ரவுண்டில் அவர் காமெடியாக நடித்து வருகிறார்.
நடிகர் வடிவேலு காமெடி நடிப்பில் மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பிலும் தன்னால் ரசிகர்களை கவர முடியும் என்று மாமன்னன் படத்தில் எம்எல்ஏ கேரக்டரில் நடித்து நிரூபித்தார். அதே போல் மாரீசன் படத்திலும் அவரது நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. காமெடி நடிப்பை காட்டிலும் குணச்சித்திர நடிப்பிலும் வடிவேலு தனிமுத்திரை பதித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது, நான் சொல்றதை மட்டும் நீ செய் என்று சொல்கிறவர்களிடம் வேலை செய்ய எனக்கு பிடிக்காது. நான் சொல்றதை செஞ்சுட்டு போயிட்டே இருய்யா என்று சொன்னால் அது ஆக்சன் பிலிம் என்றால் சரியாக வரும். ஒரு ஆக்சன் ஹீரோவுக்கு அது ஓகே.
நான் சொன்னதை மட்டும் செய் என்றால் நீ சொன்னதை செய்வதற்கு புதிதாக வந்த ஒரு ஆளை வைத்துக்கொள். இதை ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். யாரையும் நான் திட்டவில்லை. இப்படிதான் ஒவ்வொரு படத்திலும் ஒரு டைரக்டரிடம் போய் கெஞ்சுவேன். கேஎஸ் ரவிக்குமார் சார்கிட்ட சார் இந்த சீனை இப்படி பண்ணினா நல்லா இருக்கும் என்று சொல்வேன்.
பி வாசு சார்கிட்ட போய் கேப்பேன். டிரைவர் கார் ஓட்டும்போது வண்டி கவிந்துடும். எதிர்ல ஏதோ மஞ்ச கொடி பிடிச்சிட்டு ரோட்டுல வர்றாங்க என்பார். அது மஞ்சக்கொடி இல்லையா, மஞ்ச லாரி என்று சொல்வேன். லாரியா என்று கேட்டுக்கொண்டே போய் காரை மோதிடுவார். கண்ணு தெரியாத டிரைவர் கூட கார்ல டிராவல் பண்ணுவேன். இதெல்லாம் அவங்க ரசிப்பாங்க. நம்ம சொல்றதை கேட்டுப்பாங்க. அவங்க எல்லாம் பெரிய டைரக்டர்ஸ் ஜாம்பவான் என்று நடிகர் வடிவேலு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





