தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கடந்த 1990களில் இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு. 2010ம் ஆண்டு வரை அவர் நடித்த படங்களில் காமெடி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இம்சை அரசன் 23ம் புலிகேசி இந்திரலோகத்தில் நா அழகப்பன் தெனாலிராமன் போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றார்.
ஒரு கட்டத்தில் திமுக ஆதரவாளராக மாறிய வடிவேலு தொடர்ந்து திமுக மேடைகளில் அவ்வப்போது பேசி வருகிறார். மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரமாட்டோம் என்று மறுத்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பலரும் தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் வடிவேலு அதுகுறித்து பேசியிருக்கிறார்.
நேற்று சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் வடிவேலு பேசியதாவது, காக்கா காக்கா மாதிரிதான் கத்தும். காக்கா அதோட தாய் மொழியில் கா கா ன்னு கத்துது. கிளி கீ கீ ன்னு அதோட தாய் மொழியில் கத்துது. பசுமாடு அம்மான்னு அதோட தாய்மொழியில் கத்துது. நாய் அதோட தாய்மொழியில் வவ் வவ் வவ் ன்னு குரைக்குது.
இப்போது மாடுகிட்ட போய் நாய் மாதிரி கத்துன்னா அது என்ன செய்யும்? கிளிகிட்ட போய் காக்கா மாதிரி கத்துன்னா அது என்ன செய்யும்? பூனை மியாவ்ன்னு கத்தும். அதுகிட்ட போய் குயில் மாதிரி கத்துன்னா அது என்ன செய்யும்? ஒண்ணை மட்டும் சொல்லிக்கிறேன்.
யார் எது வேண்டுமானாலும் கத்துக்கட்டும். ஆனால் கட்டாயப்படுத்தாதீங்க அய்யா. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கறேன். எங்கள் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாசாரம் இருக்கு. ஒரு மொழி இருக்கு. அதுதான் எங்களின் அடையாளம். எங்கள் தமிழ்நாட்டில் அடையாளம் தமிழ் தாய்தான். தமிழ் மொழிதான்.
நான் பேசுகிற என்னுடைய வட்டார மொழி இந்த மொழி, நான் இலக்கியம் படிக்கலே, தொல்காப்பியம் படிக்கலே. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட மொழி, 2 ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கே இத்தனை பவர்னா, 5 ஆயிரம் வருஷத்துக்கு முந்திய தமிழ் மொழிக்கு எவ்வளவு வலிமை இருக்கும். அதனால் மத்த மொழிகளை எங்களுக்கு திணிக்க வேண்டாம், புகுத்த வேண்டாம் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியிருக்கிறார்.





