கோவித் காலகட்டத்தில்தான் ஓடிடி தளங்கள், சினிமா உலகில் அறிமுகமாகின. ஐந்தே ஆண்டுகளில் இதன் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இப்போது தியேட்டர்கள், ரசிகர்களை விட ஓடிடி தளங்களை நம்பி படம் எடுக்கும் நிலை அதிகரித்து வருகிறது.
அதனால் சில பிரபல இயக்குநர்கள் வெப் சீரிஸ் இயக்குநர்களாகி விட்டனர். பிரபல நடிகர்கள் கூட வெப் சீரிஸ்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் சினிமாவை போல, சீரிஸ்களிலும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. அதனால் நடிக்கும் தளம் வேறாக இருந்தாலும் வருமானம் ஒன்றாகவே இருக்கிறது.
இந்த சூழலில் தற்போது ஓடிடி தளங்கள் தங்களது நிபந்தனைகளில் பல புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. அதன்படி முன்பு போல எல்லா படங்களையும் வாங்குவதில்லை. அதே வேளையில், பல கோடிகளை கொட்டிக்கொடுத்து வாங்குவதும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் வந்த நயன்தாரா நடித்த அன்னபூரணி பஞ்சாயத்தை அடுத்து, இனி இதுபோன்ற விவகாரங்கள், படத்தின் உரிமத்தை வாங்கிய பின் ஏற்பட்டால், உரிமம் பெற ஓடிடி தளத்திடம் வாங்கிய மொத்த தொகையையும் தயாரிப்பாளர் திருப்பித் தர வேண்டும் என்ற புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்தை, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம், ரூ. 80 கோடிக்கு வாங்கியுள்ளது. அதாவது, துணிவு படத்தை ரூ. 75 கோடிக்கு வாங்கிய நிலையில், இந்த படத்துக்கு ரூ. 5 கோடி சேர்த்து விக்னேஷ் சிவன் இயக்குநர் என்ற பேசப்பட்ட போதே, இந்த படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுவிட்டது.
இந்நிலையில், ஓராண்டுக்கு மேலான நிலையில், விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி, படத்துக்கான வைப் அதிகரித்துள்ள நிலையில் படத்தின் விலையை உயர்த்த வேண்டும் என, அஜீத் படத்தின் தயாரிப்பு மற்றும் படக்குழு, நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. ரூல்ஸ்னா ரூல்ஸ்தான். அக்ரிமென்டில் என்னவோ, அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட தரமுடியாது என விடாமுயற்சி படக்குழுவிடம், விடாப்பிடியாக நின்றுள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம். கடைசியில் தனது விடாமுயற்சியை கைவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.





