நடிகர் வடிவேலு, கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் மக்கள் மத்தியில் பெயர், புகழ் பெற்று விளங்கியவர். அவர் நடித்த காமெடி காட்சிக்காகவே படம் ஓடியிருக்கிறது. ஓடாத படங்களில் கூட அவரது காமெடி வெற்றி பெற்றிருக்கிறது. உதாரணமாக வின்னர், கருப்பசாமி குத்தகைதாரர், எல்லாம் அவன் செயல், ரெண்டு போன்ற பல படங்களை சொல்லலாம்.
நடிகர் வடிவேலுவை பொருத்தவரை குரூப் காமெடி காட்சிகளை அதிகமாக சினிமாவில் செய்தார். தனக்கென ஒரு 10 பேர் கொண்ட துணை நடிகர் குழுவை வைத்துக் கொண்டு, சமூகத்தில் நடக்கும் சகஜமான விஷயங்களை அவரது பாணியில் காமெடி கலந்து மக்களுக்கு கொடுத்தார். அதில் துணை நடிகர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
இயக்குநர் வி சேகர் இயக்கிய பல படங்களில் மூன்று பேரில் ஒருவராக, 5 பேரில் ஒருவராக கதாநாயகனாக வடிவேலு நடித்திருந்தார். அவை முழுநீள காமெடி படங்களாக இருந்தாலும் அதில் நடிகர் வடிவேலு நடிப்பு, மிக சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பல படங்களில் தனது காமெடி நடிப்பால், வசனங்களால் மக்களால் தவிர்க்க முடியாத அளவுக்கு உச்சாணியில் ஏறியவர் வடிவேலு.
அதுதவிர இம்சை அரசன் 23ம் புலிகசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்த வடிவேலுவை, திடீரென திமுக வில் பிரசார பீரங்கியாக மாற்றி, 2011ம் ஆண்டில் அதிமுகவுக்கு எதிராக பேச வைத்தனர். அப்போது முக அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்காக திமுகவின் ஆதரவாளராக மேடை ஏறி கேப்டன் விஜயகாந்த், அதிமுக அரசை கண்டபடி திட்டியவர்தான் வடிவேலு.
இப்படி அவர் திமுக மேடைகளில் ஏறி, சகட்டு மேனிக்கு பேசி ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டது, ரசிகர்களுக்கு அதுவரை அவர் மீது இருந்த கண்ணோட்டத்தையே மாற்றியது. அவரது சினிமா கேரியரையும் காலி செய்தது. வடிவேலுவை அதற்கு பின்புதான் பலருக்கும் பிடிக்காமல் போனது. அதில் இருந்துதான் வடிவேலுவின் சரிவு காலமும் ஆரம்பமானது.
சமீபத்தில் புதுப்பித்து கட்டப்பட்ட கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற அவர், இதுதான் திமுகவினர் குலதெய்வ கோவில் இந்த இடத்துக்கு வந்தது என் பாக்கியம் என்று பேசியிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், சினிமாவில் நீங்கள் இப்படி மோசமான இடத்துக்கு வந்ததற்கு திமுகதான் காரணம். அதை தெரிந்துக்கொள்ளாமல், இன்னும் கோமாளியாக இருக்கறீர்களே, சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சினிமா கேரியரை துவக்கி வைத்த கேப்டன் நினைவிடத்தை நீங்கள் எட்டி பார்க்கவில்லை. கேரியருக்கு எண்டு கார்டு போட்ட திமுக புகழ் இன்னும் பாடறீங்களே, நிஜத்திலும் நீங்க காமெடியன்தான் என பயங்கரமாக கலாய்த்துள்ளனர்.





