- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லாம் சரிதான், இன்னும் ஒருமுறை கூட அப்படி ஒரு விஷயத்தை நடிகர் விஜயோ, அவரது கட்சிக்காரர்களோ...

எல்லாம் சரிதான், இன்னும் ஒருமுறை கூட அப்படி ஒரு விஷயத்தை நடிகர் விஜயோ, அவரது கட்சிக்காரர்களோ யோசிக்காதது ஏன்? – தளபதி தடுமாறுகிறாரா?

- Advertisement -

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். அப்போதே தமிழக சட்டசபை தேர்தல்தான் எங்களது இலக்கு. 2026ம் ஆண்டில் முதல்வர் நாற்காலியை பிடிப்பதுதான் எங்களது லட்சியம் என்று விஜய் அதில் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

கட்சி துவங்கிய இந்த 7 மாதங்களில் இதுவரை நடிகர் விஜய், அவ்வப்போது தேர்வு எழுதும் மாணவ மாணவியர் வாழ்த்துகளை தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறார். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் 2 நாட்கள் பங்கேற்றார்.

சமீபத்தில் பனையூரில் நடந்த கட்சி அறிமுகம் கொடியேற்று விழாவில் பங்கேற்ற விஜய், கட்சி பாடலையும் வெளியிட்டார். விரைவில் அரசியல் மாநாடு நடத்தும் இடம், நாள் குறித்து அறிவிப்பேன். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன என்றும் கூறியிருந்தார். ஆனால் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மாநாடு ஏற்பாடுகள் நடந்துவருவதாக தெரிய வந்துள்ளது.

நடிகர் விஜய் தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதிக்கவில்லை. பலமுறை படத் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் வெங்கட்பிரபு கேட்டுக்கொண்டும் விஜய் அதற்கு மறுத்து விட்டார். அதற்கு காரணம், அந்த விழாவில் அரசியல் பேச வேண்டும் என்பதை தவிர்க்கவே அவர் இந்த இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி தி கோட் படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு, பிரமோ நிகழ்ச்சிகளிலும் நடிகர் விஜய் பங்கேற்க போவதில்லை என்று தெரிய வந்துள்ளது. நடிகர் விஜய் கட்சி துவங்கி 7 மாதங்கள் ஆகியும் இன்னும் பத்திரிகையாளர் சந்திப்பை ஒருமுறை கூட நடத்தாமல் தவிர்த்து வருகிறார்.

அரசியல் கட்சிகள் என்றாலே அடிக்கடி பிரஸ்மீட் நடத்தி பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் 7 மாதங்களாக ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்துக்கொண்டு விஜய், பத்திரிகையாளர்களை சந்திக்காமல், அறிக்கைகளை மட்டுமே டிவிட்டரில் வெளியிட்டு வருவது கேலிக்குரியதாக மாறி வருகிறது. செய்தியாளர்களை சந்திக்கவே தயங்கும் இவர் திமுக, அதிமுக போன்ற தமிழக அரசியலில் ஊறிப்போன திராவிட அரசியல் இயக்கங்களை எப்படி எதிர்த்து நின்று தேர்தல் களத்தில் போட்டியிட போகிறார் என பலரும் இப்போது விமர்சிக்க துவங்கி விட்டனர்.

சற்று முன்