நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தாண்டிக்குடி என்ற மலை கிராமத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது.
இதற்காக நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் கொடைக்கானல் சென்றார். அங்கு தாண்டிக்குடி என்ற பகுதியில் மலைகிராமத்தில் நடந்த படப்பிடிப்பில் 3 நாட்கள் பங்கேற்ற நிலையில் இன்று அவர் சென்னை திரும்பினார்.
நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் நாளைய தீர்ப்பு என்ற படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இப்போது அவர்தான் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக உள்ளார். ஒரு படத்துக்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குபவராக இருக்கிறார். மேலும் அதிக வசூலை குவிப்பதும் விஜய் நடித்த படங்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயுடன் ஆரம்பத்தில் பல படங்களில் நடிகர் கவுண்டமணி இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக கோயமுத்தூர் மாப்ளே என்ற படத்தில் விஜயும் கவுண்டமணியும் படம் முழுவதும் இணைந்து நடித்திருப்பவர். அதே போல் ரசிகன் என்ற படத்திலும் விஜயுடன் போலீஸாக கவுண்டமணி நடித்திருப்பார்.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணிக்கு இப்போது வயது 85 ஆகிறது. அவர் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட நிலையில் அவர் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இன்று அவரது மனைவி சாந்தி 67 வயதான நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் சாந்தியின் உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ் செந்தில் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் கவுண்டமணியின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு இருந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய், கவுண்டமணிக்கு கட்டித் தழுவி ஆறுதல் தெரிவித்தார். கவுண்டமணியுடன் நடித்த பல நடிகர்கள் நேரில் வராத நிலையில் தகவலறிந்த உடன் நேரில் சென்ற நடிகர் விஜயின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





