மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். தமிழில் உன்னைப் போல் ஒருவன் சிறைச்சாலை ஜெயிலர் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மிக விரைவில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிகர் மோகன்லால் ஒரு படத்தில் அப்பா கேரக்டரில் நடிக்க உள்ளார்.
நடிகர் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் திரிஷியம். அந்த படத்தின் முதல் 2 பாகங்கள் வெளியான நிலையில் மிக விரைவில் திரிஷியம் 3ம் பாகமும் வெளியாக உள்ளது. வருகிற மே மாதம் 21ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. அன்றுதான் நடிகர் மோகன்லால் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மலையாளத்தில் நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிகர் மம்முட்டி நடிகர் மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் படம் பேட்ரியாட். இந்த படம் வருகிற மே 1ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. மலையாளத்தில் உச்ச நட்சத்திரங்களாக உள்ள மோகன்லால் மம்முட்டி இணைந்து நடித்துள்ள இந்த படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மோகன்லால் கூறியதாவது, என்னுடைய பழைய படங்களின் சில காட்சிகளை பார்க்கும்போது என்னுடைய மனம் சோகத்தில் மூழ்கி விடும். அதற்கு காரணம் அந்த படங்களில் போட்டோக்களில் என்னுடன் நின்றிருந்த பல நடிகர்கள் இன்று உயிருடன் இல்லை என்பதுதான்.
அந்த சோகம் உடனே என்னை ஆட்கொள்கிறது. ஆனால் நான் துக்கப்படுவதால் என்ன ஆகிவிடப் போகிறது? நானும் ஒருநாள் இதுபோல் இல்லாமல் மறைந்து விடுவேன் என்பதுதான் யதார்த்தம். இந்த உண்மையை முழுமையாக தெரிந்து நான் இப்போதும் வருந்துகிறேன். கண்ணீர் என்பது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது. உலகம் எத்தனையோ தத்துவங்களை கண்டுவிட்டது. ஆனாலும் மனிதன் இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறான்.
நானும் ஒரு சாதாரண மனிதன்தானே? என் தாய் தந்தையர் சகோதரர் என்னை விட்டு பிரிந்து விட்டார்கள் என்பது எனக்கு பெரும் துயரத்தை தருகிறது. ஆனால் நான் ஒருபோதும் தனிமையாக உணர்ந்ததில்லை. கண்களை மூடினால் அவர்கள் எனக்குள்ளேயே இருக்கிறார்கள். என்னால் அவர்களை தொடவோ பார்க்கவோ முடியாது. அவ்வளவுதான் என்று நடிகர் மோகன்லால் உருக்கமாக அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





