தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக விஜய் இருக்கிறார். இதுவரை அவரது நடிப்பில் 68 படங்கள் வெளியான நிலையில், தற்போது தளபதி 69 என்ற படத்தில், எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை முடித்த பிறகு நடிகர் விஜய் முழுநேரமும் அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை மக்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் கொண்டு சென்று, மக்களின் ஆதரவை திரட்ட அவர் ஆயத்தமாகி வருகிறார். இதற்காக தொகுதி வாரியாக நேரில் சென்று மக்கள் சந்திப்பு நடத்தவும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் விஜய் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆண்டுதோறும் அதிக வருவாய் ஈட்டும் தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒரு தரப்பினர் அரசுக்கு தங்களது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்தி வருகின்றனர்.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவர் கடந்த 2023- 24ம் ஆண்டு மட்டும் 90 கோடி ரூபாய் வரி செலுத்தி உள்ளார். அதேபோல் இந்தியை தவிர்த்து பிராந்திய மொழிகளில் அதிக அளவில் ரசிகர்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகராக இருப்பவர் விஜய். தமிழ் சினிமாவில் அதிகமான சம்பளம் பெறுகிற நடிகரும் நடிகர் விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 – 24ம் ஆண்டில் மட்டும் நடிகர் விஜய் 80 கோடி ரூபாய் வரை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ளார். தனிநபர் செலுத்திய வரியில் இது மிகப்பெரிய சாதனையாக கூறப்படுகிறது. இந்த தகவலை இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் அதிக வரி செலுத்துவர் பட்டியலை இந்த அமைப்பு வெளியிடடு வருகிறது.
அந்த வகையில் 2023 – 24 நிதியாண்டில் அதிக வரி செலுத்திய நடிகர் நடிகைகள் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார். அவர் 90 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். அடுத்து விஜய் 80 கோடி ரூபாய் வரி செலுத்தி 2ம் இடத்தில் உள்ளார். 75 கோடி ரூபாய் வரி செலுத்திய சல்மான் கான் 3வது இடம், அமிதாப்பச்சன் 71 கோடி ரூபாய் வரி செலுத்தி 4வது இடம், நடிகர் அஜய் தேவகன் 42 கோடி ரூபாய் வரி செலுத்தி 5வது இடத்தில் உள்ளனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் 14 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





