தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் நடிகர் விஜய் விக்கிரவாண்டி மாநாடு மற்றும் மதுரை மாநாடுகளை வெற்றிக்கரமாக நடத்தி முடித்த நிலையில் கடந்த 13ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். உங்க விஜய் நான் வரேன் என்ற பெயரில் சனிக்கிழமை தோறும் மாவட்டம் வாரியாக நேரில் வந்து மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
முதல் வாரத்தில் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் 2வது வாரத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் அவர் மக்களை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் 27ம் தேதி மதியம் நாமக்கல்லில் மக்களை சந்தித்த அவர் இரவு கரூரில் பிரசார பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.
அப்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரிய அதிர்ச்சியில் தள்ளிவிட்டது. இந்த பரபரப்பான சூழலில் நடிகர் விஜய் நேராக சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை வழக்கறிஞர் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆளுகிற திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகாக்களால் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மீது பெரிய சதிவலை பின்னப்பட்டு இருக்கிறது என்பதை அந்த மனுவில் கூறியிருக்கிறோம்.
மேலும் மாநில அரசாங்கத்தின் கீழ் இருக்கிற தமிழக காவல்துறை இந்த மனுவை விசாரிக்க கூடாது. சிபிஐ தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுவை தாக்கல் செய்திருக்கிறோம். இதில் இரண்டு விதமான முக்கிய விஷயங்களை கோரிக்கைகளாக வைத்திருக்கிறோம்.
அதில் ஒன்று சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் இருந்த சிசிடிவி பதிவுகளை உடனடியாக கைபற்ற வேண்டும். இல்லை என்றால் அதை நீக்கி விடுவார்கள். அதே போல் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எங்களது கட்சி தொண்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தலைவர் விஜய் நேரில் சந்திக்க பாதுகாப்பு தர வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை கூறியிருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.





