நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 2024ம் ஆண்டில் பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி, தனது அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார். இப்போது தீவிர அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார்.
இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வரும் விஜய், இந்த படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அரசியலில் தீவிரம் காட்ட உள்ளார். இதற்கிடையே கடந்த ஆண்டில் நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். அப்போது கட்சிக்கொடியில் இருபுறமும் யானைகள் இருப்பது போன்று அது வடிவமைக்கப்பட்டு இருந்தது.
பகுஜன் சமாஜ் கட்சி தங்களது கட்சி கொடியில் யானையை பயன்படுத்தி உள்ள நிலையில், தங்களது கட்சி சின்னத்தை விஜய் தனது கட்சிக்கொடியில் பயன்படுத்த கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி தமிழக நிர்வாகிகள் அப்போதே தங்களது எதிர்ப்பை காட்டினர். உடனடியாக தவெக கட்சிக் கொடியில் இருந்து யானைகள் சின்னத்தை நீக்குமாறு அவர்கள் கூறிய நிலையில் விஜய் அதை பொருட்படுத்தவில்லை.
இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை உரிமையியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக வெற்றிக்கழக கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த மனு சென்னை உரிமையியல் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அந்த கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியில் யானைகள் சின்னம் இருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது என்றும் கூறினார்.
ஏற்கனவே இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பிய போது தமிழக வெற்றிக்கழகம் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யும்போது இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக கூறினார். இந்நிலையில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் தமிழக வெற்றிக்கழகம் கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் வருகிற 29ம் தேதிக்குள் பதில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.





