தமிழ் சினிமாவில் இருந்து தமிழக அரசியலுக்குள் வந்து சாதித்தவர்கள் இதுவரை 3 பேர்தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவரது வழிகாட்டுதலில் அரசியலுக்கு வந்த நடிகை ஜெயலலிதா. அதற்குப் பின் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த கேப்டன் விஜயகாந்த். எம்ஜிஆர் மக்கள் மனதில் பெற்றிருந்த அன்பும், ஆதரவும், அமோகமான வரவேற்பும், செல்வாக்கும் அவரை முதலமைச்சராக தமிழக சட்டசபையில் அமர வைத்தது.
தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார். அவரது ஆட்சிக் காலத்தை பொற்கால ஆட்சி என்று இப்போதும் மக்கள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் நலனில், மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒரு சிறப்பான ஆட்சியை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடத்தினார் என்றால் அது மிகையல்ல. அதன்பிறகு அவரது வழிகாட்டுதலில் அரசியல் வாரிசாக வந்த ஜெயலலிதாவும் தமிழகத்தில் நல்ல ஆட்சி நடத்தினார் என்றுதான் கூற வேண்டும்.
அதன்பிறகு அரசியலுக்கு வந்த கேப்டன் விஜயகாந்த் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கைப் பெற்றார். தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று, திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த வரிசையில் நடிகர் விஜய் மக்களின் பேராதரவுடன் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், கடந்த ஞாயிறு அன்று விக்கிரவாண்டியில் நடத்திய முதல் அரசியல் மாநாட்டுக்கு மக்கள் தந்த ஆதரவும் வரவேற்பும் செல்வாக்கும் அவருக்கு நிச்சயமாக தமிழக அரசியலில் பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதை பறைசாற்றுகிறது. அதுவும் தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் ஆகியோரை தான் விஜய் வழிகாட்டிகளாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் அரசியல் மாநாட்டை நடத்தியுள்ள விஜய்க்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஒரு தரப்பினர் விஜயை கடுமையாக விமர்சிக்கவும் செய்கின்றனர். எனினும் விஜய்க்கு வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தான் கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 6ம் தேதி தனியார் வார இதழ் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்கழகம் கட்சித் தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இருவரும் ஒன்றாக பங்கேற்க உள்ளனர். அம்பேத்கர் நினைவு நாளன்று நடைபெறும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட, தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் புத்தகத்தை பெற்றுக் கொள்கிறார். என தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியல் மாநாட்டுக்கு பின் விஜய் பங்கேற்கும் முதல் விழா இது என்பது குறிப்பிடப்பட்டது.





