கடந்த சில வாரங்களாக நடிகர் விஜய், ரஷ்யாவில் கிரேட்டஸ்ட் ஆல் டைம் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார். படக்குழு இன்னும் சில தினங்கள் கழித்துதான் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்புகிறது. அதற்கு சில தினங்கள் முன்னதாகவே விஜய் விமானம் மூலம் நேற்று இரவு சென்னைக்கு வந்துவிட்டார்.
விஜய் முன்னதாகவே சென்னை வர காரணம், நாடாளுமன்றத் தேர்தல் தான். இந்த தேர்தலில் கண்டிப்பாக, தனது வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே வந்து விட்டார். நடிகர் விஜய் இப்போது முன்னணி நடிகர் மட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.
அதனால் அவர் ஒரு அரசியல் தலைவராக, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ஆக வேண்டும் என்ற சூழலில், சென்னைக்கு திரும்பியுள்ளார். ஏனெனில், ஒரு நடிகராக இருந்து ஷூட்டிங் காரணமாக தேர்தலை புறக்கணிப்பதற்கும், ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து ஓட்டுப் போடாமல் புறக்கணிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
அதனால் தேவையற்ற சா்ச்சைகளும், விமர்சனங்களும் எழலாம் என்பதாகவே நடிகர் விஜய், ரஷ்யாவில் இருந்து முன்னதாகவே புறப்பட்டு, சென்னைக்கு திரும்பி உள்ளார். நீலாங்கரைப் பகுதியில் உள்ள ஓட்டு சாவடி மையத்தில், நடிகர் விஜய் வருகைக்காக ரசிகர்கள் காலை முதல் அவரை காண்பதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் வெள்ளை சர்ட், ஜீன்ஸ் பேண்ட் கெட்டப்பில், மீசை தாடியின்றி கோட் பட ஹேர் ஸ்டைலில், காரில் ஓட்டுச் சாவடி மையத்துக்கு வந்தார் நடிகர் விஜய். ஓட்டுப்பதிவு செய்யும் அறை உள்ள பகுதிக்கு விஜய் நடந்து வரும்போது ரசிகர்கள் கூட்டம் திரண்டது. கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நடிகர் விஜய், அங்கிருந்து நகர முடியாமல் தவித்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அங்கிருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அவரை சுற்றி வளைத்து பாதுகாத்து ஓட்டுச்சாவடி மையத்துக்குள் அழைத்துச் சென்றனர். அப்போது நடிகர் விஜயின் கையில் விரல்களுக்கு மேல் பகுதியில் ஒரு பேண்டேஜ் ஒட்டியிருந்தார். ரஷ்யாவில் நடந்த படப்பிடிப்பின் போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு அந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.எனினும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டு, ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றார் நடிகர் விஜய்.





