தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்து இப்போது ஹீரோவாக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் நடிகர் சூரி. விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து, அவரது நடிப்பில் அடுத்து வரும் டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 படம் ரிலீஸாகிறது. திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது நடிகர் சூரி கூறியதாவது, நான் அடுத்தடுத்த சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறேன். டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 படம் வெளியாக உள்ளது. உலகின் தலைசிறந்த மேதைகளில் ஒருவராக இளையராஜாவும் இருப்பார். அவர் இப்போது 83 வயதிலும் பாடல் எழுதி இசையமைத்து அவரே பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளையராஜா இருக்கும் இந்த காலகட்டத்தில் நானும் உள்ளேன் என்பதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். இறைவன் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இளையராஜாவுக்கு கொடுத்து இன்னும் பல படங்களில் அவர் இசையமைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.
அற்புதமான வாழ்வியலை கொடுக்கக் கூடிய இசையமைப்பாளர் அவர். காலத்திற்கும் நாம் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய புத்தகம்தான் இளையராஜா. கதாநாயகனாக என் சினிமா பயணம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. காமெடியனாகவும் கதாநாயகனாகவும் என்னை மக்கள் ஏற்றுக்கொண்டு நல்ல வாய்ப்பை கொடுத்தார்கள். விடுதலை 2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் பங்களிப்பில் ஒரு படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.
கங்குவா திரைப்படம் நன்றாக உள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு எளிய ரசிகனாக குடும்பத்துடன் நான் சென்று பார்த்தேன். 4 பேர் சொல்லும் எதிர்மறை கருத்துக்களை பார்க்க வேண்டாம். நிறைய பேர் சொல்லும் நல்ல கருத்துக்களை பார்க்க வேண்டும். கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.
அந்த நல்ல எண்ணத்திற்கு நான் தலைவணங்குகிறேன். பல பேருடைய உழைப்பு இந்த படத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கியுள்ளார்கள். எதிர்மறை விமர்சனம் செய்தால்தான் வரவேற்கப்படுகிறது என நினைத்து சிலர் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள கேமரா முன்பு நின்று எதிர்மறை விமர்சனத்தை செய்து வருகின்றனர். நடிகர் தனுஷ் – நயன்தாரா விவகாரத்தை நான் பார்க்கவில்லை. அது அவர்கள் 2 பேருக்கும் உட்பட்டது. இவ்வாறு நடிகர் சூரி கூறியிருக்கிறார்.





