இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. ஆனால் இந்த படத்தில் அப்பா, மகன் என 2 வேடங்களில் விஜய் நடிக்கிறார். அதில் மகன் விஜயை இளமையாக காட்ட டீ ஏஜிங் தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிரத்யேக படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த விஜய், இப்போது சென்னைக்கு திரும்பி விட்டார்.
இன்னும் இரண்டு நாட்கள் சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கில் விஜய் பங்கேற்றால், அவரது போர்ஷன் மொத்தமாக முடிந்தது. அதன்பிறகு, அவர் கோட் படத்துக்கு டப்பிங் மட்டுமே பேச வேண்டும். ஆனால் ஏற்கனவே இடைவேளை வரையிலான அவரது காட்சிகளுக்கு விஜய் டப்பிப் பேசி முடித்து விட்டார், இன்னும் மீதி பாதி படத்துக்கு மட்டுமே டப்பிங் பேச வேண்டியுள்ளது.
இதற்கிடையே அவர் பேச வேண்டிய இரண்டாம் கட்ட டப்பிங்கை ஜூலை மாதத்துக்கு தள்ளி போட்டிருக்கிறார். ஏனெனில் கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில்தான் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதனால் போதிய அவகாசம் இருப்பதால் ஒரு மாதம் கழித்து டப்பிங்கை முடித்துவிட விஜய் திட்டமிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது விஜய் 69 படத்தை முடித்து விடவும் விஜய் ஏற்கனவே திட்டமிட்டு விட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவும், ஆறே மாதங்களில் அந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்து, வரும் 2025ம் ஆண்டின் மத்தியில், அந்த படத்தை ரிலீஸ் செய்யவும் விஜய் தீர்மானித்துள்ளார். விஜயின் 69வது படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார்.
இதற்கிடையே விஜய், ஜூன் மாதம் முழுவதும் தனது அரசியல் மற்றும் சொந்த விஷயங்களுக்கான செயல்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதாவது வருகிற ஜூன் 22 அன்று அவரது 50வது பிறந்த நாள் வருகிறது. அதை ரசிகர்களுடன் தடபுடலாக கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறது. பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ, மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்கும் விழா நாளாகவும் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை கடந்த மே மாதமே நடத்த விஜய் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அந்த மாநாட்டை நடத்த முடியவில்லை. அதை இந்த மாதத்தில் அவர் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ஜூன் மாதத்தில் பல தரமான சம்பவங்களை செய்ய தளபதி விஜய் முடிவு செய்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பயங்கர உற்சாகத்தை தந்துள்ளது.





