நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் நேற்று முன்தினம் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், முதல் நாள் வசூலாக தமிழ்நாட்டில் மட்டும் 17 கோடி ரூபாய், உலகளவில் 60 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2ம் நாளில் ஆயுதபூஜை விடுமுறை தினத்திலும் முதல் நாளை விட வேட்டையன் படத்துக்கு வசூல் குறைந்திருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் இடையே கடந்த சில ஆண்டுகளாக பனிப் போர் நிகழ்ந்தது. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் ஏற்பட்ட பஞ்சாயத்து, ரஜினி சொன்ன காக்கா கழுகு கதையில் மேலும் விஸ்வரூபம் எடுத்தது. ஒரு கட்டத்தில் விஜய் -அஜீத் ரசிகர்கள் மோதிக்கொள்வதை விட, விஜய் – ரஜினி ரசிகர்கள் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது.
சமூக வலைதளங்களில் ரஜினியை பற்றி விஜய் ரசிகர்களும், விஜய் பற்றிய ரஜினி ரசிகர்களும் தாறுமாறுக்காக கலாய்த்து கமெண்ட் செய்து விமர்சித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய், லியோ பட விழாவில் பேசும்போது, ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் மட்டும்தான். நான் தளபதியாக மட்டுமே இருந்துவிட்டு போகிறேன் என்று அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதேபோல் லால் சலாம் விழாவில் பேசிய ரஜினியும் விஜய் நான் பார்த்து வளர்ந்த பிள்ளை, அவருக்கு நான் போட்டியோ, எனக்கு விஜய் போட்டியோ கிடையாது. அப்படி நினைத்தால் அது மிகவும் தவறான விஷயம் என்று அவரும் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். இதையடுத்து அந்த பிரச்சனை சுமூகமாக முடிவடைந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் படத்தை தியேட்டரில் வந்து நடிகர் விஜய் பார்த்தது தற்போது உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள அந்த தியேட்டருக்கு வழக்கமாக விஜய் படம் பார்க்க வருவார் என்றும், ரஜினி, அஜீ்த் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் படங்களை பார்ப்பது மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்கள் என்றாலே அந்த தியேட்டரில் வந்து விஜய் படம் பார்ப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
விஜய் வீட்டில் ஹோம் தியேட்டர் இருந்தாலும் இப்படி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பது, படத்தில் ரசிகர்கள் எந்தெந்த மாதிரியான காட்சிகளுக்கு எப்படி ரியாக்சன் செய்கிறார்கள்? எது மாதிரியான காட்சிகளை ரசிகர்கள் விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விஜய் போன்ற பெரிய நடிகர்கள் இப்படி தியேட்டருக்கு வருவது வழக்கம். வேட்டையன் படம் பார்க்க வந்த விஜய் முகமூடி அணிந்து, யாருக்கும் தெரியாமல்தான் வந்துள்ளார். ஆனால் அப்போது அவருடன் வந்த இயக்குனர் வெங்கட் பிரபுவை பார்த்த பலரும், அவருடன் இருப்பது நடிகர் விஜய் தான் என்று உறுதிப்படுத்தி உள்ளனர்.விஜய், வேட்டையன் படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்தது வைரலாகி வருகிறது.





