நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவுக்குள் துணை நடிகராக வந்து பிறகு தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக நடிக்க துவங்கியவர். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, சூது கவ்வும், பீட்சா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
தர்மதுரை, கருப்பன், ஆண்டவன் கட்டளை, மாமனிதன் என ஹீரோவாக மாறிய படங்களில் பெரிய வெற்றிகளை தொட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் அடுத்து விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாகவும் நடித்தார். பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார்.
இதைத்தொடர்ந்து வில்லனாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கான் படத்திலும் நடித்தார். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, பிரியாமணி போன்றவர்களும் நடித்தனர். ஏனென்றால் இந்த படத்தை தமிழ் சினிமா இயக்குனர் அட்லி இயக்கினார். ரூ. 1150 கோடி ரூபாய் வசூலித்த ஜவான் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதில் நித்யாமேனன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின், வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படங்கள் வெளிவர இருக்கின்றன.
இந்நிலையில் வாழை படம் பார்த்த விஜய் சேதுபதி கூறுகையில், வாழை மிக அற்புதமான திரைப்படம். படத்தை பார்த்த பிறகு, படம் முடிந்தது போலவே தெரியவில்லை. இன்னும் அந்த படத்துடன் இருப்பது போலவே இருக்கிறது. வாழை படத்தில் பேசப்பட்ட அரசியல், வசனம், நடித்த அனைவரும் அந்த ஊரில் அந்த வாழ்க்கைக்கு மத்தியில் அந்த ஊர்க்காரர்களில் ஒருவராக அங்கிருந்து இன்னும் வெளிவர முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறேன்.
வாழை படம் எடுத்த மாரி செல்வராஜூக்கு நன்றி. இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை பதிய வைத்ததற்கும் நன்றி. சாதாரணமாக கடந்து போகிற செய்திகளுக்கு பின்னால், இப்படி ஒரு வாழ்க்கை இருப்பதை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்ததற்கு நன்றி. இப்படி ஒரு வாழ்க்கையை நாம் தெரிந்துக்கொள்வது நம் வாழ்க்கையின் மீது நமக்குள்ள சில கேள்விகளை எழுப்பும் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவுக்கு வாழை பட இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.





