தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ரசிகர்களால் மக்கள் செல்வன் என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த 25ம் தேதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நடிகர் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடிகை நித்யா மேனன் நடித்திருக்கிறார்.
குடும்பக் கதை பின்னணியில் உருவான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மகாராஜா படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு இது ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரம்யா மோகன் என்பவர், தனக்கு தெரிந்த ஒரு பெண்ணை விஜய் சேதுபதி பல ஆண்டுகளாக பாலியல் இன்பத்திற்காக பயன்படுத்திக் கொண்டதாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கோலிவுட் காஸ்டிங் பவுச் சம்பவங்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண் விஜய் சேதுபதியால் பயன்படுத்தப்பட்டதாகவும் இப்போது அந்த பெண் உடல்நலம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மறுவாழ்வு மையத்தில் இருந்து வருவதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தனது கேரவனுக்கு வருவதற்காக அந்த பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் தந்ததாகவும் கேரவன் ஓட்டுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு இணையத்தில் வைரலான சில மணி நேரங்களில், அந்த பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் இதற்கு விளக்கம் கொடுத்த அந்த பதிவை செய்த ரம்யா மோகன், சம்பந்தப்பட்ட அந்த பெண்ணின் பாதுகாப்புக் கருதியே இந்த பதிவுகளை நீக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு கூட இது உண்மை இல்லை என்று நன்றாக தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள். எனக்கும் என்னைப் பற்றி தெரியும். இதுபோன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. என்னை சேர்ந்தவர்களும் என் குடும்பத்தினரும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதை அப்படியே விட்டு விடுங்கள்.
அந்த பெண் தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார். இதனால் அவருக்கு சில நிமிடங்கள் புகழ் கிடைக்கிறது, அதை அவர் அனுபவித்துக் கொள்ளட்டும். நான் நடித்த படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு அவதூறு பரப்புவதன் மூலம் அந்த படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்று நினைத்திருக்க கூடும். ஆனால் அவ்வாறு நடக்காது. இன்றைய சூழலில் ஒரே ஒரு சமூக ஊடகக் கணக்கு இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் எதையும் கூறலாம். பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி தற்போது விளக்கம் தந்திருக்கிறார்.





