நடிகர் விஜய், கடந்த 2ம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை துவங்கியிருக்கிறார். அவரது அரசியல் வருகை அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தை அளித்தாலும், அதிமுக திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளுக்கு ஒரு விதத்தில் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றன. உதிரி கட்சிகளுக்கும் இது உதறலை தந்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், நடிகர் விஜயகாந்த் தான். அவரது அரசியல் வருகை இப்படித்தான் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தியது. தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்த போது, திமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் அவரது அரசியல் பின்னடைவுக்கு, அவரது உடல் நலம் பாதிப்பே முக்கிய காரணமாக இருந்தது.
விஜயை பொருத்தவரை, மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். மக்கள் செல்வாக்கு நிறைந்த ஒரு கலைஞராக, காணப்படுகிறார். சினிமாவில் நம்பர் 1 பொசிஷனில் இருக்கும் அவர், சினிமாவை உதறிவிட்டு அரசியலுக்கு வருவதையே பலரும் பாராட்டுகின்றனர். ஏனென்றால் மார்க்கெட் இழந்த பிறகு அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதை பலரும் கவனித்து புகழ்கின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன், விமான நிலையத்தில் இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்திடம் விஜய் அரசியல் கட்சி துவங்கியிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ரஜினிகாந்த், வாழ்த்துகள் வாழ்த்துகள் என கூறிவிட்டுச் சென்றார். வேறு எதுவும் அவர் அந்த இடத்தில் பேசவில்லை.
தற்போது, தனக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி சொல்வதற்காக விஜய், அவரை போனில் அழைத்து பேசியிருக்கிறார். போனில் ரஜினியிடம் விஜய் பேசியபோது, அவர் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சி துவங்கியதற்கான காரணம், தனது எதிர்கால திட்டங்கள் என பல விஷயங்களை ரஜினியுடன் மனம்விட்டு பேசியதாக தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய்க்கு முன்பே, மக்களின் செல்வாக்கை சம்பாதித்தவர் ரஜினிகாந்த். ஆனால் அவர் அரசியலுக்கு வருவார் என மிக ஆவலாக எதிர்பார்த்த நிலையில், பின்வாங்கி விட்டார். ஆனால் ரஜினியை விட 24 வயது குறைந்த, விஜய் துணிச்சலாக அரசியல் களத்தில் இறங்கி விட்டார். திமுக, அதிமுக கட்சிகளை விரட்டி விட்டு, முதல்வர் நாற்காலியை பிடிப்பது என முடிவு செய்துவிட்டார். அரசியலில் தனது ஜூனியர் விஜய்க்கு, சீனியர் ரஜினி வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிப்பாரா, என்பதை வரும் நாட்களில் தெரிந்துக்கொள்ளலாம்.





